நஃஜிபா - கவிதை

வேசியின் மகன்


இரவை
என் இரண்டு
கண்களாலும் உறங்குகிறேன்
வேசியின் மகன்
என் அற்புத இரவில் ஒன்றை
கடன் வாங்கிச் சென்றதால்
மீள இயலா உறக்கத்தில்
மேலும் இரண்டு நாட்கள்
உறக்கத்திலேயே கரைந்து போயிற்று.

ஒவ்வொரு இரவும் பகலும்
வேசியின் மகனுக்கும் அவளுக்கும்
இடையே நிகழும்
அல்லல்களுக்கிடையே இழுபட்டு
தூக்கிட்டு நடுவானில் தொங்குகிறது
அந்த ஒரு இரவையும் பகலையும்
என் கண்களுக்குள் படரச் செய்து
வாழும்படி செய்கிறேன்.
பின் மீண்டும்

இன்னுமொரு இரவையும் பகலையும்
வேசியின் மகன்
தன்னை ஒரு குயவனாக்கி
அவனுக்கும் அவளுக்குமிடையில்
கொலை செய்யப்படும்
இரவுகளையும் பகல்களையும்
ஒரு மட்பாண்டத்தைச் செய்து
அதில் பத்திரப்படுத்துகிறான்
பின் அதை
என்னிடம் இரவல் தந்து
என் இன்னுமொரு இரவை
கடன் வாங்கிச் செல்கிறான்..

பொய்யிலிருந்து முளைத்த நாள்

ஒவ்வொரு நாளும்
ஒரு பொய்யிலிருந்தே
முளைத்தெழுகின்றது.
நேற்று உன் முகத்திலிருந்து
முளைத்த நாள் போல
ஒவ்வொரு முளைப்பு என்பதும்
ஒரு பொய்யான யுகத்தின்
ஒவ்வொரு பொய்யான நாட்கள்தான்.
நாட்களின் முடிவு என்பதும்
பொய்யான வாக்குறுதிகளால்
நிரம்பி வழிகின்றது.
நமது பொய்கள்
எமது நாட்களை நகர்த்திச் செல்லும் வலிமைமிக்கவை.
நாம் புணர்வதிலும்
சண்டை இடுவதிலும்
எம்மையும் எமது பொய்கள்
மிகைத்து விடுகிறது.
ஒவ்வொரு நாளிலும்
நாம் பொய்களை
நமக்குள் பரிசளிப்பதைப் போல
வேறு எவராலும் முடிவதில்லை அது.
நான் உணர்கிறேன்,
ஒவ்வொரு பொய்யிலிருந்தும்
நமது நாட்கள் வளர்ந்து வருவதை
பின்
உண்மையில் மோதிச் சிதருண்டு
நிறையப் பொய்களாகி
மீள வளர்வதை
இன்னும்
சொல்லப்படாத பொய்கள்
நமக்குள் திணறிக் கொண்டிருப்பதை.