திரு.து.குலசிங்கம் ஈழத்தின் இலக்கியப்பரப்பில் தனது ஆழமான தேடல்மிகு வாசிப்பனுபவங்களினால் கவனிப்புக்குரியவராகின்றார். ஈழத்தின் வடபகுதியில் அமைந்திருக்கும் கடலோர நகரான பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், உதயன் புத்தக நிலையத்தின் உரிமையாளாராக அண்மைக்காலம் வரையிருந்தார். தவிர்க்கமுடியாத காரணங்களினால் தமிழகத்திற்கும் ஈழத்திற்குமிடையில் நாடோடியாகப் பயணித்துக் கொண்டிருந்தார். புனைகதைசாரா எழுத்துருக்களின் மூலம் தனது இலக்கியப் பங்களிப்பினை ‘ஆத்மஜோதி’ எனும் சஞ்சிகையில் (1967) ஆன்மீகம் பற்றிய கேள்வியை எழுப்பிய கட்டுரையுடன் ஆரம்பித்து ‘அம்மாவ்’, ‘ஒசை’, ‘மௌனம்’, ‘வேர்கள்’, ‘கனவு’, ‘மல்லிகை’ஆகிய சிற்றிதழ்களில் கட்டுரைகள், கடிதங்கள் எனும் வகையில் தொடர்கிறார்.
காலச்சுவடு இதழ் (97) ‘போரும் வாழ்வும்’ எனும் தலைப்பின் கீழ் இவரது நேர்காணலைப் பதிவு செய்திருந்தது. அக்கால கட்டத்தின் நெருக்கடி மிகுந்த யாழ்ப்பாணச் சூழலை எடுத்துக்காட்டும் முக்கியபதிவாக அந்நேர்காணல் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் அந்நேர்காணல் ஆற்றூர் ரவிவர்மா என்னும் கவிஞரால் மொழியாக்கம் செய்யப்பட்டு கேரள சாகித்திய அக்கடமி வெளியீடான ‘சாகித்திய லோகாவில்’ வெளியானது. 1982 மார்ச்சில் அ.யேசுராசா, பத்மநாபஐயர் ஆகியோருடன் இணைந்து முதன்முதலில் இவர் தமிழகத்துக்குப் பயணஞ் செய்தார். அதிலிருந்து சுந்தர ராமசாமி, தமிழவன், எஸ்.வி.ஆர், ஞானி, ‘க்ரியா’ ராமகிருஷ்ணன், கி.அ. சச்சிதானந்தன், ஜெயமோகன், வேதசகாயகுமார் போன்றவர்களுடன் ஏற்பட்ட நட்பு வெறும் இலக்கிய நட்பையும் மீறிக் குடும்ப உறவாய் இன்றுவரை தொடர்வதாக குறிப்பிடுகிறார். எண்பதுகளில் நெருக்கடி மிகுந்த சூழ்நிலையிலும் ‘அறிவோர்கூடல்’ எனும் இலக்கியச் சந்திப்பு நிகழ்வினை பருத்தித்துறையில் டாக்டர்.எம்.கே.முருகானந்தன், பா.ரகுவரன் போன்றவர்களுடன் இணைந்து மிகச் சிறப்பாக நடத்தி வந்தார். ‘யதார்த்தா’ என்ற அமைப்பைத் தொடங்கி அதனூடாகச் சில நூல்களையும் இவர் வெளியிட்டு வந்தார். ஆனால் ‘யதார்த்தா’ எனும் சிற்றிழை வெளிக்கொண்டுவர இவர் விரும்பியபோதும், அது இன்றுவரை ஒர் உன்னதக் கனவாகவேயுள்ளது. ‘சகமனிதன் மீது அன்பும் சக மனிதனுக்கு சேவையும்’ என்பதை நோக்கமாகக் கொண்ட இவர் சிற்பம், ஒவியம், சங்கீதம், நல்ல சினிமா என்பவற்றிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். தனது சொந்த முயற்சியால் இவர் வீட்டில் நூலகமொன்றை அமைத்து, தான் படித்து இன்புற்ற நூல்களையெல்லாம் மற்றவர்களும் படித்து இன்புறவேண்டுமென்ற நோக்கில் முனைப்புடன் இயங்கி வருகிறார். இலங்கையில் எந்தவொரு ஆக்க இலக்கியகாரனும் செய்திராத செய்யவும் நினைத்திராத அருஞ் செயலாகவே இதைக் கருதலாம். பல்வகைத்தான புத்தகங்களை அறிமுகம் செய்து ஆழ்நிலை வாசிப்பிற்கும் இடைவிடாத தேடலுக்கும் குலசிங்கம் ஒரு தூண்டுகோலாகச் செயற்படுவதைப் பதிவு செய்யவேண்டிய தேவையுள்ளது. யாழ் நூலகத்தினுள் சென்று பார்த்தபோது அங்கிருந்த புத்தகங்களில் அநேகமானவை என்னை வியப்பில் ஆழ்த்தின. வடமராட்சிப் பகுதியில் நவீன இலக்கியம் பற்றிய உரையாடல்களுக்கு குலசிங்கம் காரணமாக இருந்து வருகிறார். ‘எனக்குப் படிக்க என்று வாங்கிய நூல்கள் மற்றவர்களுக்கும் பயன்படுவது சந்தோசம் தருகிறது’ என்று சொல்லும் குலசிங்கம் சில புத்தகப்பிரியர்களால் இழந்த நூல்களும் ஏராளம். இதுவும் பதிவுக்குரியதே.
ஆழமான வாசிப்புலகினுள் உங்களின் பிரவேசம் எவ்விதம் நிகழ்ந்தது?
என்னுடைய வாசிப்புலகத்துக்கு வித்திட்டு வளர்த்தவர் எங்களுடைய தந்தையார். சிறுவயதிலேயே கதை கேட்கும் ஆவல் என்னுள் துளிர்விட்டிருந்தது. இரவில் நித்திரைக்குச் செல்லும்பொழுது தனது இரு பக்கத்திலும் என்னையும் தம்பியையும் படுக்கவைத்து கதைகள் சொல்வார். கதை கேட்டபடியே நாங்கள் நித்திரையாகி விடுவோம். பின் அடுத்த நாள் விட்ட இடத்திலிருந்து கதை தொடரும். இரண்டாவது உலக யுத்தத்தின் போது பர்மா, ஜப்பானியர் வசம் வீழ்ந்து கொண்டிருந்தபொழுது அங்கிருந்த இந்தியர்களும் யாழ்ப்பாணத்தவரும் கல்கத்தா நோக்கி நடைப்பயணமாக வந்தனர். ரங்கூனில் வாழ்ந்து கொண்டிருந்த தந்தையாரின் சகோதரியின் குடும்பமும் சகோதரரின் குடும்பமும் அந்தக் கூட்டத்தினருடன் புறப்பட்டு நடைப்பயணமாக வந்தனர்.சகோதரியின் இரு குழந்தைகள் அந்த நடைப்பயணத்தில் இறந்துவிட்டனர். இந்தியர்களுக்கு எதிரான துவேசம் கொண்டிருந்த பர்மியர்கள் இவர்களின் பொருட்களைக் கொள்ளை அடிப்பதிலும் இவர்களைக் கொலை செய்வதிலும் ஈடுபட்டிருந்தனர். அகதிகளுக்குப் பாதுகாப்பாகச் சிற்சில இடங்களில் பிரிட்டிஷ் இராணுவத்தினர் பாதுகாப்புக் கொடுத்து வந்தனர்.
தந்தையார் இராணுவத்தில் இருந்ததனால் நேரில் பல அனுபவங்களைப் பெற்றிருந்தார். ஒரு நல்ல நாவலாசிரியனுக்கு இருக்கும் கதை சொல்லும் பண்புடன் அவற்றை எமக்குச் சொல்லி வந்தார். பிற்காலத்தில் ப.சிங்காரத்தின் நாவல்களை வாசித்த பொழுது தந்தையாரும் ஒரு நல்ல கதை சொல்லி என்று உணர்ந்து கொண்டேன். அவர் எழுதவில்லை. கதை சொன்னார். இன்று சென்னை வானொலியில் புதினப் பக்கங்கள் என்னும் பகுதியில் நாவல் வாசிக்கும் பொழுது கேட்கும் உணர்வினையே நாம் அன்று பெற்றிருந்தோம்.
நான் இரண்டாம், மூன்றாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த ஐம்பதுகளின் முற்பகுதியில் ‘கல்கி’யில் ராஜாஜி எழுதிய ‘ராமாயணம்’ ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்ற பெயரில் வெளிவந்து கொண்டிருந்தது. ஓவ்வொரு வெள்ளிக்கிழமையும் வகுப்பிலுள்ளவர்களை வட்டமாய் இருத்தி வைத்து பால
சுந்தரம் வாத்தியார் இராமாயணத்தை வாசிப்பார். வாசிப்பு மட்டுமல்ல உதாரணங்களைக் காட்டி விளங்கப்படுத்துவார். பாவனைகள் மூலம் மாணவர்களின் மனதில் பாரதியாரின் கண்ணன் பாடல்களைப் பாடுவார். பாரதி பற்றி கதை கதையாகச் சொல்லுவார். பிற்காலத்தில் நான் எட்டயபுரத்தில் பாரதி வாழ்ந்த வீட்டைப் பார்த்து அவர் நடந்த வீதிகளில் நடக்கும் போது செல்லையா வாத்தியார் நினைவில் வந்து நான் சொன்னது உண்மைதானே என்று கேட்பது போல் இருந்தது.
பருத்தித்துறை சித்திவிநாயகர் பாடசாலையில் படிக்கத் தொடங்கிய பொழுது பண்டிதர் கிருஷ்ணபிள்ளை வாத்தியாரிடம் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரை மாணவர்கள் தோடம்பழ வாத்தியார் என்று அன்போடு அழைப்பார்கள். அவர் தோடம்பழம் பற்றி நிறையப் பாடல்களைப் பாடிக்காட்டுவார். ‘கல்கி’யில் இராமாயணம் முடிந்து பாரதம் தொடங்கிய காலமோ அல்லது பாலபோதினியில் பாரதம் பற்றிய பாடம் இருந்ததனாலோ பாரதக் கதைகள் பற்றி எங்களுக்குக் கூறுவார். நிறையப் பாடல்களையும் பாடிக்காட்டுவார். நண்டின் காலை உடைக்காதே, நாயைக் கல்லால் அடிக்காதே என்று ஓசையுடன் பாட, நாங்கள் தொடர்ந்து பாடுவோம். பிற்காலத்தில்தான் தெரியும் எங்கடக் கவிஞர் யாழ்ப்பாணன் எழுதிய பாலா கவிதை இதுவென. பண்டிதர் ஏரம்பமூர்த்தி வாத்தியார் ஒரு மாடனிஸ்ட். தமிழ்நாட்டிலிருந்து கல்கி, மாலி போன்றவர்களை எங்கள் பாடசாலைக்கு அழைத்து வந்து கல்கியைப் பேசவும், மாலியைக் கீறவும் வைத்தவர். நாடகங்கள் தயாரித்து நடித்தவர். இந்தக் காலத்தில்தான் எங்கடக் கடற்கரையில் தமிழகத்திலிருந்து வந்த தி.மு.க.வினர் பொதுக்கூட்டம் போட்டுப் பேசினார்கள். அவர்களின் வேகமான அடுக்குமொழி வார்த்தைகள், மனதில் தமிழ்மீது ஒருவித பற்றுதலை ஏற்படுத்தியது என்றால் அவர்கள் பேசிய கடவுள் மறுப்புகள் மனதில் ஒரு அதிர்வினை ஏற்படுத்தியது. அந்தக் கூட்டத்தில் பேசியவர்களில் ஒருவரைத்தான் இன்று எனக்கு ஞாபகமிருக்கிறது. பிற்காலத்தில் தமிழ்நாட்டு அமைச்சராக இருந்த இரா.நெடுஞ்செழியன் தான் அவர். எங்கடரில் ‘மணிஸ்கபே’ என்ற புத்தக சாலையில் தி.மு.க பத்திரிகைகளான ‘முரசொலி’, ‘போர்வாள்’ போன்றவை தொங்கவிடப்பட்டிருக்கும். அவற்றை வாசிக்கும் பொழுது மனதில் ஒருவித வீராவேசம் தோன்றும். தமிழை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் தானாகவே மனதில் எழுந்தது. கடற்கரையில் நடக்கும் அரசியல் கூட்டங்களுக்கு
தந்தையாருடன் செல்வோம். திரு.அ.அமிர்தலிங்கம், செ.இராஜதுரை, திரு.வ.பொன்னம்பலம் போன்றவர்களின் பேச்சு இவர்களைப் போல் நாங்களும் பேசவேண்டும் என்ற ஆவலை எழுப்பியது. பேசவேண்டுமென்றால் நிறைய வாசிக்க வேண்டும் என்பதை உணர்ந்து வாசிப்புக்குள் புகுந்தேன். கேட்கும் உலகிலிருந்து வாசிக்கும் உலகு உருவாகியது. ‘கண்ணன்’, ‘கல்கண்டு’ போன்ற சஞ்சிகைகள் அறிமுகமாகின்றன. கல்கண்டில் என்னைக் கேளுங்கள் என்ற பகுதி ஆர்வத்துடன் வாசிப்பைத் துண்டுகின்றது. கண்ணனில் சின்னச் சின்ன அறிவியற் கட்டுரைகள், கட்டுரை வாசிப்பைத் தூண்டுகின்றன. இந்தக் கால கட்டத்தில் தான் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற திரைப்படம் வெளிவந்து தமிழர்களிடையே ஒருவித எழுச்சியை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. அதே காலத்தில் கல்கண்டில் கட்டப்பொம்மன் ஒரு கொள்ளைக்காரன் என்றும் தமிழனில்லை தெலுங்கன் என்றும் ஆய்வுக் கட்டுரையொன்றை தமிழ்வாணன் எழுதிக்கொண்டிருந்தார். கட்டபொம்மனைக் கிண்டல் செய்து சிறு சிறு நாடகங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. கேள்வி பதில் பகுதியில் ம.பொ.சியைக் கிண்டல் செய்து அவருடைய படத்துடன் பதில்கள் துணுக்குகள் வெளிவந்து கொண்டிருந்தன. புலித்தேவன் தான் உண்மையான தமிழ்வீரன் என்றும் ஆங்கிலேயரை எதிர்த்து போர் செய்தவன் என்றும் எழுதிக் கொண்டிருந்தார். ஆனால் சிவாஜி கணேசனின் நடிப்பின் மூலம் தமிழ் மக்களின் நெஞ்சில் ஏற்படுத்தப்பட்ட கட்டபொம்மனின் விம்பத்தை அவரால் உடைக்க முடியவில்லை.
‘கண்ணன்’, ‘கல்கண்டி’லிருந்து ‘குமுதம்’, ‘கல்கி’, ‘ஆனந்த விகடன்’ போன்ற சஞ்சிகைகளுக்கு வாசிப்பு நகர்கின்றது. ‘குமுதத்தில்’ பி.எஸ்.ராமையாவின் ‘தினை விதைத்தவன்’ என்ற தொடர்கதை தொடங்குகின்றது. நான் வாசித்த முதலாவது தொடர்கதை அல்லது நாவல் இதுவே. இதைத் தொடர்ந்து சாண்டில்யனின் ‘யவனராணி’ குமுதத்திலும் கல்கியில் நா.பார்த்தசாரதியின் ‘மணிபல்லவம’ தொடர்கதைகள் வெளிவருகின்றன. சோமுவின் ‘அக்கரைச்சீமையில் ஆறுமாதங்கள்’ என்ற பயணத் தொடர் கட்டுரை ‘கல்கி’யில் வெளி வந்துகொண்டிருந்தது. ‘வாழும் வர்ணனைகள்’ ‘நாவலும் நானும்’ போன்றவை வேறொரு வாசிப்பு உலகினை அறிமுகப்படுத்தின.
அறுபதுகளில் இருந்து அறுபத்து ஆறுவரை அகிலன், நா.பார்த்தசாரதி, ஜெகசிற்பியன் போன்றவர்களின் எழுத்துகளுடன் செல்லுகின்றது. அவர்களுடைய எழுத்துக்கள் கனவுலக இலட்சியங்களாக்கப்பட்ட பொழுதும் ஒரு மனிதன் சில இலட்சியங்களுடன் சமூகத்துக்காக வாழ வேண்டும் என்பதையும் மனித மேம்பாடுகளை மேன்மைப்படுத்துவதாகவும் அமைந்ததையும் நாம் உணர வேண்டும். சத்தியமூர்த்தி,அரவிந்தன், பூரணி போன்ற நா. பார்த்தசாரதியின் பாத்திரங்களும் அகிலனின் முருகையனும் அன்றைய இளைஞர்களில் உதாரண மனிதர்களாக வலம் வந்தனர்.விரகேசரியிலோ அல்லது தினகரன் வாரமலரிலோ தெரியவில்லை, எனக்கு வரும் கணவன் ‘குறிஞ்சி மலர்’ அரவிந்தன்போல் இருக்கவேண்டும் என்று எழுதியிருந்தார் ஒரு பெண். அந்த அளவுக்கு அந்தப் பாத்திரங்களே வாசகர்களைப் பாதித்திருந்தது. இதைச் சிலர் கேலி செய்தாலும் நல்ல மனிதர்களை அவர்கள் பாத்திரமாக்கினார்கள். அவை சில தாக்கங்களை ஏற்படுத்தியன என்பதை உணர வேண்டும். இந்தக் கட்டுரையை வாசித்த பின்தான் நான் ‘குறிஞ்சிமலரை’ வாசித்தேன். இந்தக் காலத்தில்தான் ஜெயகாந்தனின் ‘இருளைத் தேடி’ என்ற சிறுகதை விகடனில் முத்திரைக்கதையாகப் பிரசுரமாகியது. ஜெயகாந்தன்மீது ஓர் ஈர்ப்பு ஏற்படுகின்றது. ‘உன்னை போல் ஒருவன்’, ‘பிரளயம்’, விழுதுகள்
போன்றவற்றை வாசிக்கிறேன்.
1965 இல் ‘தீபம்’, ‘தாமரை’, ‘கணையாழி’யைத் தொடர்ந்து கசடதபற என்று வாசிப்பு தடம் மாறுகின்றது. தாமரையில் வந்த கட்டுரைகள் பேராசிரியர் கைலாசபதி, செ.கணேசலிங்கன் போன்றவர்களை அறிமுகப்படுத்துகின்றது. கைலாசபதியின் கட்டுரைகளின் பின் தரப்படும் சான்றாதார நூற்பட்டியல் நல்ல புத்தகங்களைத் தேடிப்படிக்க வைக்கின்றது.
இதே காலத்தில் ‘ஆனந்த விகடனில்’ வெளிவந்த ‘எனக்குப் பிடித்த புத்தகங்கள்’ என்கின்ற பகுதியும் நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்கின்றது. எழுத்து, நடை போன்றவை கிடைக்கின்றன. புதுக்கவிதைகள், நவீன ஓவியங்கள் அறிமுகமாகின்றன. இன்று தமிழ்ப் புத்தகங்கள் அழகாகவும் நேர்த்தியாகவும் வருவதற்கு வித்திட்டவர்கள் சென்னை வாசகர் வட்டத்தினர். சுதந்திரப்போராட்டவீரர் சத்தியமூர்த்தியின் மகளும் சமூக சேவகியுமான திருமதி. லஷ்மி கிருஷ்ணமூர்த்தி தம்பதியினரே வாசகர் வட்ட வெளியீடுகளை வெளியிட்டார்கள். 82இல் சென்னையில் இத்தம்பதியினரை நாங்கள் சந்தித்து உரையாடினோம். வாசகர் வட்டம் வெளியீட்டால் தாங்கள் நிறையப் பணத்தினை இழந்ததாகக் கூறினார்கள். ஆனாலும் நல்ல காரியத்தைச் செய்தது
மன ஆறுதல் என்று கூறினார்கள். திரு.சத்தியமூர்த்தி அவர்கள் மகள் லஷ்மிக்கு எழுதிய கடிதங்கள் ‘என் அன்புமகளுக்கு..’என்று தொகுப்பாய் வெளி வந்தது. மிக அருமையான நூல். அது கடித இலக்கியங்களைத் தேடிப்படிக்கத் தூண்டியது. டி.கே.சி.யின் கடிதங்கள், மாக்சிம் கார்க்கியின் கடிதங்கள் போன்றவை என்மீது தாக்கங்களை உருவாக்கியன. இந்தக் கால கட்டத்தில்தான் சோவியத் ரஷ்யாவின் மொழியாக்கநூல்கள் அறிமுகமாகின. நல்லதைத் தெரிந்து வாசிக்கும் வாசகனானேன் என்று சொல்லலாம்.
முற்போக்கு எழுத்தாளர், நற்போக்கு எழுத்தாளர், மச்ச எழுத்தாளர், மரக்கறி எழுத்தாளர் என்னும் பாகுபாடுகள் இலக்கியப் போக்குக்களை முன்தள்ளி இருப்பதாகக் கருதுகின்றீர்களா?
நான் இந்த முற்போக்கு, நற்போக்கு என்ற வேறுபாடுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. இலக்கியம் என்பது மனித விழுமியங்கள் மீதும் சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டதாய் அவற்றில் உயர்வுநிலைக்கு பாடுபடுவதாய் இருக்க வேண்டும் என்று நினைப்பவன். நாடு, மொழி, இனம் இவற்றைக் கடந்து மனிதனை முன்னிலைப்படுத்துவதாய் எது இருக்கின்றதோ அதுவே நல்ல இலக்கியமாகும். 1989இன் நடுப்பகுதியில் நானும் எனக்கருகிலிருந்து வைத்தியம் பார்த்த வைத்தியரும் அவரிடம் வேலை செய்த நர்சுகளும் இந்திய இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டோம். நாங்கள் விடுதலைப்புலிகளுக்கு உதவிசெய்பவர்கள் என்பதே குற்றச்சாட்டு. விசாரணை செய்தவர் மேஜர் ராஜேந்தர்சிங் என்பவர். விசாரணை ஒர் மென்மையான உரையாடல் போல் நடத்தப்பட்டது. ‘எனக்குத் தெரியும் நீங்கள் அவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் இல்லை என்று. ஆனால் உங்களுக்கு அவர்களை தெரியும் யார் யார் வந்து செல்கிறார்கள் என்று கூறுங்கள்’ என்றதற்கு ‘அவர்கள் வருகிறார்கள் என்றவுடனேயே நாங்கள் பூட்டிவிட்டு ஒடிவிடுவோம். ஆதனால் அவர்கள் யார் என்று எமக்குத் தெரியாது’ என்று நாம் கூற, ‘பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான மதிப்பெண்கள் எவ்வளவு’ என்று கதைத்துக் கொண்டே , திடீரென்று அவர்கள் வந்தவுடன் ‘நீங்கள் மருந்தை உடனே கொடுத்து விடுவீர்கள் இல்லையா’ என்ற கேள்வி பிறக்கும். 2, 3 நாட்கள் இப்படியே விசாரணைகள் நடத்தப்பட்டது. சில நாட்களின் பின் சிக்ஃப்ரிட் லென்ஸ் என்ற ஜெர்மன் நாட்டு ஆசிரியர் எழுதிய ‘நிரபராதிகளின் காலம்’ என்ற நாடகத்தைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நாங்கள் எப்படி இந்திய அதிகாரியால் விசாரிக்கப்பட்டோமோ அதே போன்று தான் ஜெர்மன் அதிகாரியின் விசாரணையும் இருந்தது. பெரும்பாலான வார்த்தைகள் ஒன்றுபோல் இருந்தன. அதிகார திமிர்த்தனம் ஒன்றாய் இருந்தது. எங்கள் மீதான விசாரணை பருத்தித்துறை இராணுவ முகாமில் நடந்தது. அந்த விசாரணை ஜெர்மன் சிறைச்சாலையில் நடந்தது. ஆனால் ஒரே நோக்கமும் ஒரே உணர்வும்தான் இருந்தன மொழியையும் நாட்டையும் தவிர.
ழாக் ப்ரெவேர் என்பவர் ஒரு பிரஞ்சு கவிஞர். இவர் 1942ல் ‘குடும்ப வாழ்க்கை’ என்ற கவிதையை எழுதினார். இக்கவிதையை என் ஊர் நண்பர் ஒருவருக்கு வாசித்து காட்டினேன். மிகுந்த சோகத்துடன் ‘இது எங்கள் குடும்பம் பற்றி எழுதியது போல் இருக்கிறது’ என்றார். நான் பெங்களூரில் சந்தித்த விக்கிரமசேகரா என்ற சிங்கள வைத்தியருடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது ழாக் ப்ரெவேரின் கவிதையை வாசித்துக் காட்டினேன். என்னுடைய தமிழ் நண்பர் எதைக் கூறினாரோ அதையே தான் இந்தச் சிங்கள அன்பரும் கூறினார். ஒரு இஸ்லாமியரிடம் இந்தக் கவிதையைக் கூறினால் அவரும் தன் குடும்பம் பற்றி எழுதியதாகவே கூறுவார். நான் முன்பு சொல்லியது போல் மனித விழுமியங்களுடனும் சமூக அக்கறையுடனும் எழுதப்படும் இலக்கியங்கள் வட்டங்களுக்குள்ளும் சதுரங்களுக்குள்ளும் ஓடிப்பிடித்து விளையாடுவனவல்ல. இன்னும் பலபடைப்புகளை எடுத்துப் பார்க்க
லாம். காஃப்காவின் ‘விசாரணை’, ஜார்ஜ் ஆர்வலின் ‘1984’, ‘விலங்குப்பண்ணை’, யூழேன் இயெனொஸ்கோவின் பிரஞ்சிய நாடகமான ‘காண்டாமிருகம்’, ஜோஷ் வண்டலேயின் ப்ளமிஸ் நாவலான ‘அபாயம்’ போன்றவற்றை நாம் வாசிக்கும் பொழுது அந்தப் படைப்புகளில் வருகின்ற மனிதர்கள் அனுபவித்த அவலத்தை நாங்களும் அனுபவிப்பதுபோல் அல்லது எமக்குத் தெரிந்த ஒரு மனிதர் அனுபவித்ததை அறிந்து கொண்டதுபோல் இருக்கும்.
உமா வரதராசனால் தொடர்ந்து எழுத முடியாது ஏனெனில் நீர்த்து போய்விடும் இயல்புடையது அவரது எழுத்து. பீறிட்டு எழும்பும் நீரூற்றுப் போன்ற எழுத்துருவோடு முன்னெழுந்த ரஞ்சகுமாரை குழப்பியது பேராசிரியர் கா.சிவத்தம்பி என கூறப்படும் விமர்சனம் பற்றி?
சில விமர்சகர்கள் ஏனோதானோவென்று வார்த்தைகளை விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவையெல்லாம் அர்த்தமற்றவை என்று நான் நினைக்கின்றேன். எழுத்து என்பது இயல்பாய் ஒரு மனிதனுக்குள் எழுவது. அவன் அதைத் தன் பயிற்சி மூலம் வளப்படுத்திக் கொள்கின்றான். என் எழுத்தாள நண்பர் ஒருவரிடம் ‘ஏன் நீங்கள் நீண்ட காலமாய் எழுதவில்லை’ என்று கேட்டபொழுது அவர் கூறியது, ‘என்னால் எப்பொழுது எழுதாமல் இருக்க முடியாது என்று தோன்றுகின்றதோ அப்பொழுதுதான் நான் எழுதுகின்றேன்’ என்றார். உமா வரதராசன் நல்ல சிறுகதைகளைத் தந்துள்ளார்.
ஆனால் அவருடைய சிறுகதைகளை ஒற்றையாய் வாசிக்கும் பொழுது நன்றாக இருக்கும்.ஆனால் ஒரு தொகுப்புக்குள் அடக்கி வாசிக்கும்பொழுது ஒன்றையே திரும்பத் திரும்ப சொல்லுவது போல் சலிப்பூட்டும். அவர் காணுகின்ற மனிதர்களையெல்லாம் ஒருவித எரிச்சலுடனேயே பார்க்கின்றார். புதுமைப்பித்தன் மனிதர்களை கிண்டல் செய்வார். அந்தக் கிண்டலில் ஒரு மனித
நேயம் இருக்கும். உமாவரதராசன் எரிச்சல்படுவார். அது அவருடைய சுபாவமாக இருக்கலாம் இல்லையா? ரஞ்சகுமாரின் படைப்புகள் ‘அலை’யில் வெளிவந்த பொழுது ஒரு நல்ல எழுத்தாளன் என்று எம்மில் பலரால் அறியப்பட்டதன் பின் பேராசிரியர் அவர்கள் ரஞ்சகுமாரை விதந்துரைக்கத் தொடங்கினார். காகம் இருக்க பனங்காய் விழுந்ததோ என்பது போல் பேராசிரியர் நல்ல எழுத்து என்று சொல்லத் தொடங்கவும் ரஞ்சகுமார் எழுதாமல் விடவும் சரியாக இருந்தது. பேராசிரியர் குழப்பியதால் ரஞ்சகுமார் எழுதாமல் விட்டார் என்றால் ரஞ்சகுமார் எழுதாமல் இருப்பது மேல் இல்லையா? ஒருவர் ஒரு எழுத்தாளனை எழுதவைக்க முடியும். அதே போல் எழுதவிடாமல் குழப்ப முடியும் என்றால் அந்த எழுத்தாளன் எழுதினால் என்ன எழுதாமல் விட்டால் என்ன. என்னவோ தெரியவில்லை பேராசிரியர் நிறைய சொல்லுவார். சற்றுக் காலத்தின் பின் தான் சொன்னவற்றையே திரும்ப மீள்பரிசோதனை செய்ய வேண்டும் என்பார். எழுத வைப்பது, எழுதவிடாமல் குழப்புவது பற்றி நடந்த ஒரு வேடிக்கை விநோத நிகழ்ச்சியை அப்படியே நினைவுக்கு கொண்டு வருகின்றேன்.
1986 செப்டெம்பரில் கட்டைவேலி நெல்லியடி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் நடந்த ‘உயிர்ப்புகள்’ வெளியீட்டு விழாவில் சிறப்புரையாற்றிய பேராசிரியர் அவர்கள் உயிர்ப்புகளுக்கு தான் எழுதிய பின் உரையையே வாசித்தார். அதில் குறித்த ஆசிரியர்கள் மிக்க கவனத்துடனேயே தங்கள் படைப்புக்களை ஆக்கியுள்ளாரெனக் கூறப்படுமானால் நிச்சயமாக சிறுகதை பற்றிய அவர்கள் வாசிப்பு வட்டம் மிகக் குறுகியதாகவே இருக்க வேண்டும் போலத் தோன்றுகின்றது. ஏனெனில் புதுமைப்பித்தன், கு.ப.ரா, கு.அழகிரிசாமி, லா.சா.ரா, தி.ஜானகிராமன், புரசு பாலகிருஷ்ணன் போன்றோருடைய ஆக்கங்கள் பற்றிய பரிச்சயமிருப்பின் இந்தப் படைப்புக்கள் பெரும்பாலானவற்றில் அவற்றில் இப்பொழுது காணப்படாத ஒரு கணம் நிச்சயமாய் இருந்திருக்கும் என்றார். இவரின் இந்த வாக்குமூலம் அங்கிருந்த அந்தப் பன்னிரண்டு எழுத்தாளர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. மறைந்த எழுத்தாளர் நெல்லை.க.பேரன் அந்த மேடையிலேயே அப்பாவித்தனமாய் பேராசியரைப் பார்த்து ‘நீங்கள் இதைப் படியுங்கள் இதைப் படியுங்கள் என்று கூறியவற்றை நாம் படித்தோம். இப்பொழுது இவர்களைப் படிக்கவில்லை என்கிறீர்கள். அன்றைக்கே இவர்களையும் படியுங்கள் என்று சொல்லி இருக்கலாம். அது மட்டுமல்ல நாங்கள் எழுதியதை நல்லதென்று சொல்லிவிட்டு
இப்ப இப்படிப்போட்டு உடைத்து விட்டீர்களே’ என்று கேட்டார். இதைப் பற்றி வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றது என நினைக்கின்றேன். அறிவோர் கூடலில் நடந்த ஒரு சந்திப்பின் போது பேராசிரியரிடம் நான் இந்த சம்பவத்தை நினைவுபடுத்தி பேரனுக்கு என்ன பதில் உங்களிடம் இருக்கிறது என்றேன். ‘நான் பத்து வயதில் போடச் சொன்ன சட்டையை பேரன் இருபது வயதில் போட்டால் நான் என்ன செய்வது’ என்று கேட்டார். உங்கள் மாணவனின் குறை வளர்ச்சிக்கு நீங்களும் ஒரு காரணம் தானே என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டேன். ரஞ்சகுமார் விவேகம் உள்ளவர் எனக்கு நீண்டகாலமாக அவரைத் தெரியும். பேராசிரியர் குழப்பித்தான் அவர் எழுதாமல் விட்டார் என்பதை நான் நம்பமாட்டேன்.
தலித் இலக்கியங்கள் என்று பார்க்கும் பொழுது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கருக்கு, ஆறுமுகம், கோவேறு கழுதை, தகப்பன் கொடி, முத்தி, கவர்மென்ட பிராமணன் என ஓர் உன்னதமான படைப்பிலக்கிப் பட்டியலை முன்வைக்க முடியும். அதேபோல ஈழத்தில் அப்படியொரு பட்டியலை வைக்க முடியாதா?
கருக்கு, கவர்மென்ட் பிராமணன் என்பவை வாழ்க்கை வரலாறு, ஆறுமுகம், கோவேறு கழுதை, தகப்பன்கொடி, முத்தி என்பவை படைப்பிலக்கியங்கள். படைப்பிலக்கியம் உன்னதமா இல்லையா என்பதை எப்படி வரையறுப்பது. இந்தியாவில் தலித்துகளின் வாழ்க்கை மிகப்பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றது. நான் புட்டபத்தியில் இருந்த காலத்தில் நரிக்குறவர்களிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்களுடைய வாழ்க்கைநிலை மிகவும் மோசமாகவே உள்ளது. கருக்கு, கவர்மென்ட் பிராணமன், உபாரா போன்ற தலித்துக்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்துப் பார்க்கும்பொழுது தெரியும் அவர்களுடைய வாழ்க்கை மிகவும் கீழ்மட்டத்தில் உள்ளது என்பதை புரிந்து கொள்வீர்கள். ஆனால் இங்கு வெளிவந்த தலித் வாழ்க்கை வரலாறுகளை வாசிக்கும் பொழுது எம்முடைய தலித் எழுத்தாளர்களின் வாழ்க்கை அவ்வளவு மோசமான நிலையில் இல்லை. ஓரளவுக்கேனும் மேன்மையாகத்தான் இருந்துள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது.
இங்கு வந்த பெரும்பாலான சாதிய இலக்கியங்கள் கோட்பாட்டு ரீதியாக, ஒருவகை இயந்திர தன்மைகொண்டதாக படைக்கப்பட்டுள்ளன. இயல்புரீதியாக வெளிவந்தவை மிகக் குறைவென்றே சொல்லலாம். இங்கு நல்ல தலித்தியச் சிறுகதைகள் வந்த அளவுக்கு தலித்திய நாவல்கள் வரவில்லை என்றே சொல்லலாம். இங்கு நல்ல தலித்திய இலக்கியங்கள் இல்லை என்பதற்காக இங்கு சாதிக் கொடுமைகள் அழிந்துவிட்டன என்பது அல்ல. நான் இங்கு பல சம்பவங்களை நேரிலேயே கண்டுள்ளேன். 1999இல் நடந்த ஒரு எழுத்தாள நண்பரின் திருமணத்திற்கு நாங்கள் சென்றிருந்தோம். ஆனால் சில நண்பர்கள் சபை முடிந்தபின் மாலையே வந்தார்கள். என்ன தான் நெருங்கிப் பழகியபோதும் சபையில் இருந்து சாப்பிட அந்த நண்பர்களால் முடியவில்லை என்றே நினைக்கின்றேன். டாக்டர் எம்.கே. முருகானந்தனின் ‘வைத்திய கலசம்’ வெளியீட்டு விழாவிற்கு தெணியான் தலைமை வகிக்க திரு. கந்தையா ஆசிரியர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவின் அடுத்த நாள் காலையில் பருத்தித்துறையின் பிரபல்யம் மிக்க கல்லூரி ஒன்றின் அதிபர் என்னைச் சந்தித்து ‘தலைமை தாங்குவதற்கும் வரவேற்புரை நிகழ்த்துவதற்கும் வேறு ஆட்கள் எங்கள் ஊரில் இல்லையா’ என்று என்னுடன் காரசாரமாகச் சத்தம் போட்டார். அதற்கு நான் ‘அவர்கள் எங்களுடைய நண்பர்கள், அவர்கள் இலக்கியத்துடன் தொடர்புள்ளவர்கள் தலைமை தாங்கவும், வரவேற்புரை நிகழ்த்தவும் அவர்களுக்குத் தகுதியுண்டு. எனவே தான் எங்கள் வெளியீட்டு விழாவில் அவர்கள் இவற்றைச் செய்தார்கள்’ என்றேன்.
அண்மையில் நடந்த சில புத்தக வெளியீட்டு விழாக்களில் எங்கள் நண்பர்களே புத்திசாலித்தனமாக அவர்களை மேடையேற்றாமல் விலக்கி விட்டுள்ளதை நினைக்கும்பொழுது தெணியான் போன்றவர்களிடமிருந்து ‘இன்னும்’ படைப்பிலக்கியங்கள் வெளிவந்து கொண்டிருப்பதில் ஆச்சரிய
மில்லை. அவர்கள் யதார்த்தத்தைத் தான் எங்களுக்குத் தங்கள் எழுத்தின் மூலம் காட்டுகின்றார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை குறித்த விமர்சனங்களுக்கு அப்பால் இது தொடர்பான இலக்கியப் பதிவுகள் இடம் பெற்றுள்ளனவா? இல்லையென்றே சொல்ல வேண்டும். கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் இலக்கியத்தில் முன்னெடுக்கப்பட்டது போல் யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் முன்னெடுக்கப்படவில்லை. யாழ்ப்பாண முஸ்லிம்கள் வெளியேற்றம் பற்றி நாம் எல்லோருமே மௌனமாகவே இருக்கின்றோம்.
‘அறிவோர்கூடல்’ என்னும் எண்ணக்கரு உருவானது எங்ஙனம்? அது எவ்வளவு தூரம் வினைத்திறன் வாய்ந்ததொன்றாக இயங்கியது?
முதலில் ஒன்றை உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்த எண்ணக்கரு டாக்டர்.எம்.கே.முருகானந்தன், பா.ரகு வரன் போன்றவர்களின் எண்ணத்தில் தோன்றியதுதான். நான் அவர்களுடன் சேர்ந்து செயற்பட்டேன் என்பது தான் உண்மை. இப்படியான ஒரு அமைப்பு தோன்ற வேண்டும் என்ற ஆசை என் மனதில் ஏற்கனவே இருந்தது. ஆகவே நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். என் எண்ணக்கருவில் டி.கே.சியின் ‘வட்டத்தொட்டி’ பற்றி அறிந்த அந்தக் காலத்திலிருந்து இப்படியொரு இலக்கியச் சந்திப்புக்களும் குடும்ப உறவுகளும் ஏற்பட வேண்டும் மென்று ஆவலாய் இருந்தேன். 1982 இல் நாங்கள் (யேசுராசா, பத்மநாப ஐயர்) நாகர்கோவில் சென்றபொழுது சுந்தர ராமசாமியின் வீட்டின் மேல்மாடியில் நடந்த ‘காகங்கள்’ ஒன்றுகூடலில் கலந்து கொண்டாம். அதன் செயற்பாடு என்னை ஊர் திரும்பியவுடன் நாங்களும் ஒரு சந்திப்பு நிகழ்வை நிகழ்த்த வேண்டுமென்று என் நண்பர்களை வேண்டிக் கொண்டேன். அப்பொழுது என் வீட்டுக்கு நிறைய இளைஞர்கள் வருவார்கள். வாசிப்பதும் விவாதிப்பதுமாக நாட்கள் சென்று கொண்டிருந்த காலமது. அதையே ஒரு சந்திப்பாக மாற்றினோம். அதை ‘பௌர்ணமி ஒன்றுகூடல்’ என்று அழைத்தோம். மாதம் ஒருமுறை அந்த சந்திப்பு நடந்தது. முதல் சந்திப்பில் செ.யோகராசா கவிதை பற்றிப் பேசினார். ஒரு வருடம் நடைபெற்றது. யாழ்ப்பாணம், சாவகச்சேரி, அளவெட்டி போன்ற இடங்களிலிருந்து பலரும் வந்து கலந்து கொண்டார்கள். இது ஒரு மகிழ்ச்சிகரமான சந்திப்பாகவே இருந்தது. கடைசி சந்திப்பில் தோட்டப் பாடசாலைகளின் கல்வி நிலை என்ற கட்டுரையை ஒருவர் படிக்க மூவர் கேட்டோம். அதனுடன் பௌர்ணமி ஒன்று கூடலும் முடிந்து விட்டது.
இடையில் சில முயற்சிகள் ஆனாலும் ஒன்றும் பயன் தரவில்லை. 1991 நின் மாதம் 11ம் திகதி முதலாவது அறிவோர் கூடல் கூட்டம் நடைபெற்றது. ஓவியர் ரமணி அவர்கள் ஓவியம் பற்றிப் பேசினார். இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் வரை மாதம் இரு சந்திப்புகள் இடம் பெற்றன. எல்லாத் துறைகள் பற்றியும் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. அந்தக் கட்டுரைகள்மீது விவாதங்கள் நடத்தப்பட்டன. அந்த விவாதங்கள் அர்த்தமுள்ளவையாக இருந்தன. தெரியாத பலவற்றை நாங்கள் அந்த விவாதங்கள் மூலம் தெரிந்து கொண்டாம். ஆண்டுவிழாக்களின் போது
சிறுவர்களைக் கொண்டு ரகுவரன் சிறுவர் நாடகங்களைத் தயாரித்து நடத்தினார். 40 வருடங்களுக்குப் பின் ரகுவரனின் முயற்சியால் ‘செட்டி வர்த்தகன்’ என்னும் நாட்டுக் கூத்து திரும்பவும் மெருகூட்டப்பட்டு ஆடப்பட்டது. இவற்றையெல்லாம் விட ஒரு வித நட்பு எங்கள் எல்லோருடையேயும் நெகிழ்வை ஏற்படுத்தி ஒன்றாக்கியது. ஒரு குடும்பச் சூழல் உருவாகியது. கூட்டம் முடிந்தபின் நடைபெறும் நட்புறவான பேச்சுகளில் குடும்பங்கள் பற்றிய சுகதுக்கங்கள் விசாரிப்புகள் மனிதநேயம் மிக்கதாய் இருந்தது. நாம் தனித்து விடப்பட்டவர்களல்ல. எம்மைச் சுற்றியும் நண்பர்கள் நட்புகள், பச்சாதாபங்கள், அன்புகள் சூழ்ந்திருந்தன. இதைவிட வேறு எதை நாங்கள் எதிர்பார்க்க முடியும். அன்பாயிருத்தல் ஒன்றாயிருத்தல் ஒரு நல்ல காரியந்தானே.
இரண்டாவது கட்ட ‘அறிவோர்கூடல்’ 1997மே தொடங்கி 1999 நின் 26 ஆம் திகதி வரை நடந்தது. இந்தக் காலத்தில் மாதம் ஒருமுறையாகச் சந்தித்தோம். அந்தச் சூழ்நிலையில் கூட ஆர்வத்துடன் நண்பர்கள் கலந்து கொண்டார்கள். எனது மனைவியின் வைத்திய சிகிச்சைக்காக நான் சென்னை சென்ற பின்பு நண்பர் திரு.ரகுவரன் அவர்கள் தொடர்ந்து இரண்டு வருடங்களாக நடத்தி வந்தார். அண்மையில் நான் ஊர் சென்றிருந்த பொழுது நண்பர்கள் எல்லாரும் மறுபடியும் ‘அறிவோர்கூடலை’ திரும்பவும் தொடங்கி நடத்தும்படி வற்புறுத்தினார்கள். ஆனால் காலம் என்னை திரும்பவும் சென்னை செல் என்றது.
இப்பொழுது ‘அறிவோர்கூடலைப்’ பற்றி யோசிக்கும் பொழுது சில தவறுகள் தெரிய வருகின்றது. குறிப்பாக நாங்கள் விட்ட மிகப்பெரிய தவறு அறிவோர் கூடலில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை எழுத்துருவில் கொண்டு வராததுதான். எவ்வளவோ முயன்றோம். பேசுபவர்கள் தங்கள் கட்டுரைகளை எழுத்துருவில் தரும்படி கேட்டுக் கொண்டோம். ‘ஓம்’ என்று சொன்னவர்கள். ‘ஓம்’ என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். கட்டுரைகள் எழுத்துருப் பெறவில்லை. ‘மல்லிகை’ ஜீவா அவர்கள் தன்னுடைய சஞ்சிகையில் கட்டுரைகளை வெளியிடுவதற்கு சம்மதித்திருந்தார். ஒன்றும் நடைபெறவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் சொல்கின்றேன் அந்த நாட்கள் மிக இனிமையான நாள்கள் மனதில் சந்தோசங்ளை விதைத்த நாள்கள். நண்பர்கள் ஒன்றாகக்கூடி மகிழ்ந்த நாள்கள். இன்றும் அதன் பசுமைகள் மனதில் இருக்கின்றன.
உங்கள் ‘யதார்த்தா’ இதழ் என்னும் கனவு என்னவாயிற்று?
யதார்த்தம் சொல்லியது கண்டபடி யெல்லாம் ஆசைப்படாதே என்று, ஆனால் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒருவிதத் தவிப்புடன் இருந்த காலமது. ஒரு இதழ் தொடங்கி விடுவோமென்று நினைத்தோம். அதற்கு யதார்த்தா என்று பெயரும் வைத்தாயிற்று கட்டுரைகள் வாங்கினோம். தலையங்கம் எழுதியாகிவிட்டது. ஆனால் இதழ்தான் வெளிவரவில்லை.‘யதார்த்தா’ இலக்கிய வட்டம் தன் முதலாவது இலக்கியச் சந்திப்பாக டானியல் அன்ரனியின் ‘வலை’ சிறுகதைத் தொகுதிக்கான ஒரு விமர்சனக் கூட்டத்தை நடத்தியது. அதைத் தொடர்ந்து நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து ‘யதார்த்தா’ வெளியீட்டின் மூலம் சந்திரா தியாகராஜாவின் ‘நிழல்கள்’ சிறுகதைத் தொகுதியையும் டொக்ரர்.முருகானந்தனின் ‘தாயாகப் போகும் உங்களுக்கு’, ‘எயிட்ஸ்’ ரஞ்சகுமாரின் ‘மோகவாசல்’ என்னும் சிறுகதைத் தொகுப்பையும் வெளிக்கொண்டு வந்தோம்.
அர்ப்பணிப்புள்ள புனைவு இலக்கிய, புனைவு இலக்கியம் சாரா வரவுகள் ஈழத்தில் எவ்வளவு தூரம் இடம்பெற்றுள்ளது?
கேள்வி சரியாக இல்லை என்று நினைக்கின்றேன். அதிகமாக எல்லா இலக்கியபடைப்புகளுமே ஓர் அர்ப்பணிப்பினூடாகத்தான் வருகின்றது. எனக்குத் தெரியும். அ.யேசுராசா ‘அலை’, அலைவெளியீடுகளை வெளியிட்டபொழுது பட்ட கஷ்டங்கள் தன் வருவாயில் பெரும்பகுதியை அவற்றிற்கே செலவிட்டார். அதே போன்று டானியல் அன்ரனி தன்னுடைய வறுமைநிலையிலும் ‘சமர்’ நடத்திவந்தார். அவர் ‘சமர்’ நடத்தும்பொழுது ஏற்பட்ட கஷ்டங்களை புரிந்து கொண்டவன். டொமினிக் ஜீவா நீண்ட கஷ்டத்தினூடாகத்தான் மல்லிகையை நடத்தி வருகின்றார். ‘ஞானம்’ இதழை ஒவ்வொரு முறை கொண்டு வரும் பொழுதும் கணிசமான தொகையை அதன் ஆசிரியர் இழப்பதாக புலோலியூர்
சதாசிவம் கூறினார். ஈழத்தில் சஞ்சிகை வெளியிடுதல், நூல் வெளியிடுதல் என்பவை ஒரு வித போராட்டந்தான். புத்தகத்தை வைத்துவிட்டுப் போங்கள். விற்றபின் பணம் தரலாம் என்ற வேதவாக்கினை ஈழத்து வியாபாரிகள் காலங்காலமாகக் கடைப்பிடித்து வருகிறார்கள். அதே நேரத்தில் இந்தியப் புத்தகங்களுக்கு பணத்தை கொடுத்தே கொள்வனவு செய்கின்றார்கள். ஈழத்தில் வெளியீட்டு நிறுவனங்கள் பெரிதாக இல்லை. அண்மையில் ஒன்று இரண்டு நிறுவனங்கள் இயங்குவதாக அறிகிறேன். எழுதுவது மாத்திரமல்ல அதை வெளியிட்டு விற்கும் அவஸ்தையும் எழுத்தாளனுக்கே உண்டு.
நாட்டின் நெருக்கடியான அரசியல் சூழல், உங்கள் வாசிப்பு தேடல் முயற்சிகளையும் வாழ்க்கைக் கோலங்களையும் எவ்விதம் பாதித்தது?
வாசிப்பையும் இலக்கியத்தேடலையும் பொறுத்த வரை நான் பெரிதும் பாதிப்புக்குள்ளாகவில்லை. ஒவ்வொருநாள் நிகழ்விலும் வாசிப்பு எனக்கு மிகமுக்கியமானதொன்று. போரின் அனர்த்தங்களிலிருந்து விடுபட வாசிப்புக் கைகொடுத்தது. நாளை மீது நம்பிக்கை கொள்ள வைத்தது. மனதில் ஆறுதலைத் தந்தது வாசிப்புத்தான். இந்தக் காலத்தில்தான் 1990-1999 வரை நிறையத் தொடர்புகள் ஏற்பட்டன. புலம்பெயர் சஞ்சிகைகளுடனும் தொடர்புகள் ஏற்பட்டன. 80 சதவீதமான புலம்பெயர் சஞ்சிகைகள் புலம்பெயர் வெளியீடுகள் எனக்கு ஒழுங்காகக் கிடைத்து வந்தன. தமிழகத்துடனும் நெருக்கமான உறவுகள் ஏற்பட்டன. ‘சதங்கை’, ‘கனவு’ முதலான இதழ்களுடனும் தொடர்புகள் ஏற்பட்டன. வேர்கள் இராமலிங்கம், காலச்சுவடு கண்ணன், ‘க்ரியா’ ராமகிருஷ்ணன், விடியல் சிவா, காவ்யா சண்முகசுந்தரம் போன்றவர்கள் தாங்கள் வெளியிட்ட சஞ்சிகைகள், புத்தகங்களை எனக்கு உடனுக்குடன் அனுப்பி வைத்தார்கள். ஈழத்து வெளியீடுகள் சஞ்சிகைகளைத் தமிழகம் புலம்பெயர் நாடுகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்தேன். வேர்கள் இராமலிங்கம் ஈழத்து நூல்களை சஞ்சிகைகளை என்னிடமிருந்து பெற்று அதற்குப் பதிலாக தமிழகத்து வெளியீடுகளை அனுப்பி உதவினார். யாழ்பல்கலைக்கழக ஆங்கிலப் போதனாசிரியர் வை.சுந்தரேசன் மொழியாக்கம் செய்த சீனத்துக் கவிதைகளை அவருடன் சேர்ந்து வெளியிட்டேன். அண்மையில் வெளிவந்த ‘க்ரியா’ வெளியீடான ஐராவதம் மகாதேவனின் தமிழ் கிராமியக் கல்வெட்டு என்ற ஆங்கில நூல் அடுத்தவாரமே எனக்குக் கிடைத்துவிட்டது. தொடர்புகள் என்பது அர்த்தபூர்வமான ஒன்று என்று நான் நினைக்கிறேனே ஒழிய அது ஒரு தகுதி என்று நான் நினைக்கவில்லை. எனது நேர்காணல் காலச்சுவட்டில் வெளிவந்த பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து சிவபாலன் என்ற நண்பர் தொடர்பு என்பது ஒரு தகுதியா? என்று கேட்டிருந்தார் காலச்சுவட்டின் அடுத்த இதழில். எனது காலச்சுவட்டின் நேர்காணல் மலையாளத்தின் புகழ்பெற்ற கவிஞரான ஆற்றூர் ரவிவர்மா என்பவரினால் மலை யாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு கேரள சாகித்திய மண்டலம் வெளியிடும் ‘சாகித்திய லோகா’ எனும் சஞ்சிகையில் பிரசுரமாகியது. 1997இல் நான் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்றேன். அந்த ஊர்களில் நடந்த கருத்தரங்குகளில் எங்களுடைய நாட்டின், எங்கள் மக்களின் அவலமான வாழ்க்கையைப் பற்றிக் கூறியிருந்தேன் போர்பற்றி அவர்களுக்குத் தெரியும் ஆனால் நாங்கள் போரினால் பட்ட அவஸ்தைகள் அரசால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையால் ஏற்பட்ட கஷ்டங்களைக் கூறும்பொழுது இவ்வளவு துன்பங்களா என்று வேதனைப்பட்டார்கள். நாங்கள் பஞ்சில் மண்ணெண்ணையை ஊற்றி சிறு விளக்கேற்றி ஒளியில் வாழ்ந்ததும் சவர்க்காரத்துக்குப் பதிலாக பனம்பழச்சாற்றைப் பாவித்து துணிகளைத் துவைத்ததும் அவர்களுக்கு அதிசயமாக இருந்தது. பனாட்டை நாம் உணவாக பாவிப்பது பற்றிக் கூறிய பொழுது தொல்காப்பியத்தில் பனாட்டு என்று கேள்விப்பட்டிருக்கின்றோம். படித்திருக்கின்றோம் ஆனால் பார்த்ததில்லை என்று நாஞ்சில்நாடான் கூறினார். 1997 ஜனவாரியில் பெங்களுரில் கன்னட நாடக ஆசிரியரும் இந்திய சாகித்திய மண்டல உறுப்பினரும் கன்னடப் பேராசிரியருமான எச். எஸ். சிவப்பிரகாசம் மற்றும் எழுத்தாளர்கள் பேராசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாட இலக்கிய ஆர்வலர் இராமச்சந்திரனின் இல்லத்தில் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ஈழத்து இலக்கியங்கள் அரசியல் நிலமைகள் தமிழ் மக்களின் துன்பதுயரங்கள் பற்றியெல்லாம் பேச்சுக்கள் சென்றன. ‘செட்டி வர்த்தகன்’ என்ற நாட்டுக்கூத்தின் புகைப்படங்களை பார்த்த திரு.சிவப்பிரகாசம் அவர்கள் நாங்கள் விரும்பினால் இந்திய கலாசார அமைச்சுக்கூடாக இந்தியா வந்து கூத்தை நடத்த தான் ஒழுங்குகள் செய்வதாகக் கூறினார். நான் ஊர் வந்து இதைப்பற்றி அறிவோர்கூடலில் கூறியபொழுது நண்பர்கள் யாருமே ஆர்வம் காட்டவில்லை. அதேபோன்று ‘க்ரியா’ இராமகிருஷ்ணன் தான் வெளியிட்ட ‘க்ரியா’ தற்காலத் தமிழகராதியின் மறு பதிப்பில் சேர்ப்பதற்கு ஈழத்து சொற்களைத் தேர்ந்தெடுத்துத் தருமாறு கூறினார். நண்பர்களிடமும் புத்திஜீவிகளிடமும் தொடர்பு கொண்டு முயன்ற பொழுது எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
சமகால இலக்கியப்போக்குகள் திருப்திகரமாக உள்ளதா?
திருப்திகரமாக உள்ளதென்றுதான் சொல்ல வேண்டும். பல்வேறுவிதமான வடிவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நாம் காண்கின்றோம். இவை எவ்வளவு தூரத்திற்கு வெற்றியளித்தது, அளிக்கும் என்பதில்லை பிரச்சினை. தேக்க நிலையில் தமிழ் இலக்கியம் நின்றுவிடவில்லை என்பதை உணர்த்துகின்றது. இவற்றையிட்டு நாம் சந்தோசப்படலாம். காலம் ஓரிடத்தில் நின்றுவிடமாட்டாது. இயங்கிக்கொண்டே இருக்கும் எல்லாவற்றிலுமே மாறுதல்கள் ஏற்படுவது இயற்கை, அதில் இலக்கியமும் ஒன்று.
உங்களை ஒரு கொம்யூனிஸ்டாகக் கருத முடியுமா?
அது உங்களைப் பொறுத்தது அல்லவா. மார்க்சியம் என்பதை நான் ஒரு வாழ்க்கை முறையென்றே கருதுகின்றேன். அது வாழ்ந்து அனுபவித்தல். வெறும் சுலோகங்களையும் கோட்பாடுகளையும் சொல்லுவதுதான் ஒரு நல்ல மார்க்சிஸ்ட் என்றால் நான் ஒரு நல்ல மார்க்சிஸ்ட் இல்லை என்றே சொல்வேன். சக மனிதர்மீது அன்பு செலுத்துதல், பிறருக்குச் சேவை செய்தல், சமூக உணர்வுடன் செயற்படுதல், உண்மையான மனிதனாய் நடந்து கொள்ளுதல் இவைதான் மார்க்சியம் என எண்ணுகின்றேன். புலோலி ஆங்கிலப் பாடசாலையில் கல்வி கற்கும்பொழுது திரு.க.துரைரட்னம் திரு. எஸ். குமாரசாமி போன்ற ஆசிரியர்கள் எங்கள் மனதில் சமூக உணர்வுகளை விதைத்தார்கள். திரு. துரை ரட்ணம் அவர்கள் பின்பு பருத்தித்துறையில் பாராளுமன்ற உறுப்பினரானார். திரு. குமாரசாமி அவர்கள் தொழிற்சங்கவாதி அவர் எங்களுக்கு கொம்யூனிசத்தை அறிமுகப்படுத்தினார். அப்பொழுது கொம்யூனிசம் என்றால் எல்லோரும் சமம். ஏற்றத்தாழ்வில்லை கடவுள் இல்லை என்றுதான் நாங்கள் நினைத்திருந்தோம். அப்பொழுது நாங்கள் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். அன்று விதைத்த விதை பின்பு என்னை மார்க்சிய நூல்களைத் தேடிப் படிக்க வைத்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் மாஓய்ஸ் டான மாக்கடர். எஸ். வி. சீனிவாசகத்துடன் தொடர்பு ஏற்படுகின்றது. அவருடைய வைத்திசாலைக்குப் பக்கத்தில் எனது அறை இருந்தது. நிறைய விவாதங்கள் செய்வோம். அவருடைய எளிமையான வாழ்க்கை என்னை மிகவும் கவர்ந்தது. அவரைச் சந்திக்க வருகின்ற கார்த்திகேசு மாஸ்டர், டானியல், சூடாமணி போன்றவர்களுடன் பழகும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. ஒரு நல்ல இலட்சிய மனிதனாக போராளியாக திரு.எஸ்.வி.சீனிவாசகம் அவர்களைக் கண்டுகொண்டேன். சொல்,
செயல் இரண்டும் ஒன்றாகவே அவரிடமிருந்தது. யாழ்ப்பாணத்தில் ஒரு மார்க்சியமும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் ஒரு மார்க்சியமும், சென்னையில் ஒரு மார்க்சியமும் பேசிக் கொண்டிருக்கின்ற புத்திஜீவிகளைப் போலவோ பேராசிரியர்களைப் போலவோ அவர் இருந்ததில்
லை. நேர்மை எதற்கும் வளைந்து கொடுக்காத தன்மையவர். தான் கொண்ட கொள்கைக்காகக் கடைசி மட்டும் வாழ்ந்தார். என்னைப் பொறுத்தவரை நான் ஒரு நல்ல மனிதனாக சமூகத்தில் வாழ முயன்று
கொண்டிருக்கின்றேன் என்பதுதான் உண்மை. நீங்கள் என்னை எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும் நான் சலனப்படப்போவதில்லை.
தீராநதியில் சுந்தரராமசாமி, ஜெயமோகன் போன்றோர் எழுதியதை பற்றி மல்லிகையில் ஒரு பிரதி முணுமுணுப்பாக வரும் மேமன் கவியின் குரல் பற்றி..
இந்தக் குரல் இன்று புதிதாய்ப் பிறந்ததல்ல. 1960களிலேயே கேட்ட பழைய குரல்தான். ஜெயகாந்தன் ஆனந்தவிகடனில் எழுதத் தொடங்கியபொழுது கேட்ட அவலக்குரலின் எதிரொலிதான் இது. ஜெயகாந்தன் ஆனந்தவிகடனில் தன்னை இழந்தாரா? ஆனந்தவிகடன் ஜெயகாந்தனிடம் தன்னை இழந்ததா என்றுதான் பார்க்க வேண்டும். ஜெயகாந்தனுடைய உன்னைப்போல ஒருவன், பிரௌயம், விழுதுகள், இருளினை நோக்கி, அக்கினிப்பிரவேசம், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்றவை ஆனந்தவிகடனில்தான் வெளிவந்தன. ஆனந்தவிகடனில் ஜெயகாந்தன் படைப்புகள் வெளிவந்ததனால் பரவலாக்கப்பட்டது. பலருக்கும் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஜெயகாந்தன் ஆனந்த விகடனுக்காகத் தன்னை மாற்றிக் கொண்டவரல்ல. ஆனந்தவிகடனைப் பயன்படுத்திக் கொண்டார். ஆனந்தவிகடன் என்னும் குதிரையில் ஏறிச் சவாரி செய்தார் என்றுதான் சொல்லவேண்டும். அதேபோன்றுதான் இன்று சுந்தரராமசாமியும் ஜெயமோகனும் தீராநதியைப் பயன்படுத்துகின்றார்கள். நல்ல எழுத்தாளர்களின் எழுத்துக்கள் என்பது சிறு பத்திரிகைகளுக்குள் தேங்கிவிட வேண்டுமென்று நினைக்கிறார்களா? அப்படி தேங்கி நிற்பவைதான் நல்ல எழுத்துக்கள் என்று நினைக்கிறீர்களா? ஓன்றுமே புரியவில்லை.
எழுபதின் முற்பகுதியில் கசடதபற, கணையாழி மற்றும் சிறு சஞ்சிகைகளில் வெளிவந்த நவீன ஓவியங்கள் காலஞ்செல்ல விகடனிலும் வரத் தொடங்கியது. ஆதிமூலத்தின் ஓவியங்களைப் போடவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் விகடனுக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மற்றும் பல சஞ்சிகைகளும் நவீன ஓவியங்களை பயன்படுத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. கசடதபறவில் ஆதிமூலத்தின் ஓவியங்கள் வெளிவந்த பொழுது அதனை ஒரு சிறுவட்டமே அனுபவிக்க முடிந்தது. இன்று பலராலும் அதைப் பரிச்சயப்படுத்திக் கொள்ள முடிகின்றது. ஓவிய ஆர்வலர்கள் மிகச் சுலபமாக நவீன ஓவியங்களுடன் தங்களை இணைத்துக் கொள்கின்றார்கள். இவையெல்லாமே காலத்தின் வளர்ச்சியேன்றே சொல்ல வேண்டும். இதைப்பார்த்து அங்கலாய்ப்பதில் எவ்வித பலனுமில்லை.
நீங்கள், பத்மநாப ஐயர், யேசுராசா மூவரும் தமிழகம் வந்தது பற்றி திரு.சுந்தர ராமசாமி அவர்கள் ஒரிடத்தில் கூறியிருந்தார். அந்தப் பயணம் பற்றிக் கூறமுடியுமா?
1982மார்ச் மாதம் 3ஆந் திகதி நான், பத்மநாப ஐயர், யேசுராசா மூவரும் கட்டுநாயக்கா விமானநிலையத்திலிருந்து தமிழகத்திற்கான பயணத்தை மேற்கொண்டோம். மார்ச் மாதம் 31ஆந் திகதி இராமேஸ்வரத்தில் கப்பலேறி பயணத்தை முடித்துக்கொண்டோம். ஒரு மாத காலம் எங்களு
டைய பயணங்கள் தமிழகத்தில் பல பாகங்களிலும் திருவனந்தபுரம், பெங்களுர் போன்ற பிற மாநிலங்களிலும் தொடர்ந்தது. மிகவும் சந்தோசமாகவும், அற்புதமாகவும் அந்தப் பயணம் அமைந்தது. தமிழகத்தின் எழுத்தாளர் பலரை சந்தித்து உரையாடக்கூடியதாக இருந்தது. பலருடன் தொடர்புகளை ஏற்படுத்தி இலக்கிய உலகில் எங்களால் இயலக்கூடிய சிலவற்றை செய்ய முடிந்தது. இலக்கியம் பற்றிப் பேசினோம். அரசியல் பற்றிப் பேசினோம். நிறையப் புத்தகங்களைச் சேகரித்தோம். ஊர் திரும்பும் வேளை மதுரையில் வைகை.குமாரசாமி அவர்கள் எங்களைப் பார்த்து சிலோனில் இருந்து இங்குவந்து புத்தகங்களை மாத்திரம் காவிக்கொண்டு செல்கிறீர்களே உங்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு என்ன எடுத்துச் செல்கிறீர்களென்று கேட்டார். எதை எடுத்துச்செல்வதற்கும் எங்களுக்கு ஒரு சதக்காசும் இல்லையென்றோம். இப்படியே சென்றால் உங்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு ஏமாற்ற
மாக இருக்கும். நான் அடுத்தமாதம் யாழ்ப்பாணம் வருகின்றேன். என் அண்ணாவின் கடையில் கொஞ்ச உடுப்புக்களாவது வாங்கிச் செல்லுங்கள் என்று கூறி சில உடுப்புக்களை வாங்கித்தந்து ஊர் வரும்போது அந்தப்பணத்தைத் தாருங்கள் என்று கூறினார். இராமேஸ்வரம் வந்துவிட்டோம். துறைமுகத்துக்குள் பொதிகளைத் தூக்கிச்செல்லும் கூலிகளுக்கு கூலி கொடுப்பதற்கு எங்களிடம் பணம் இல்லை. நல்லகாலம் இலக்கிய ஆர்வலரான திரு.நாகராஜன் அவர்கள் சுங்க ஆய்வாளராக இருந்ததினால் அவர்களுக்கான பணத்தை அவர் கொடுத்தார். நாங்கள் மூவரும் எங்கள் பொக்
கற்றுக்களிலிருந்த சில்லறைக் காசுகளை தேடி எடுத்து ஒவ்வொரு கோப்பி குடித்துவிட்டு கப்பலில் ஏறினோம். தலை மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு அப்பொழுது இ.போ.ச வில் கண்டக்டராகவேலை செய்த திரு.மு. புஸ்பராசன் (அலை ஆசிரியருள் ஒருவர்) அவர்கள் அந்த பஸ்ஸில் கண்டக்டராக வந்திருந்தார். அவரே எமக்கான யாழ்ப்பாணத்துக்கான பஸ்கட்டணத்தைக் கொடுத்தார். நான் யாழ்ப்பாணத்தில் இறங்கி பருத்தித்துறை செல்வதற்கு பஸ் செலவுக்காக ரூபா
10ஐ புஸ்பராசனிடம் கடனாக வாங்கிப் போய்ச் சேர்ந்தேன். இந்தப் பயணத்தின் பின் எனக்கும் பத்மநாப ஐயருக்கும் இடையில் ஓர் இடைவெளி ஏற்பட்டது. யார் யார் பிழை என்பதல்ல ஆனால் ஏதோவொரு பிழை நடந்து விட்டது என்பதை இப்பொழுது புரிந்துகொள்ள முடிகின்றது. சில காலத்திற்கு முன்பு திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என்னைச் சந்தித்தபொழுது ஐயர் லண்டனில் ஒரு இலக்கியத் தொகுப்பு போட்டியிருக்கின்றாராம். உங்களுக்குக் கிடைத்ததா? என்று கேட்டார். நான் இல்லை உங்களுக்குக் கிடைத்ததா? என்று கேட்டேன். இல்லை சில நண்பர்களுக்குக் கிடைத்துள்ளது என்றார்.
சசி கிருஷ்ணமூர்த்தி அவர்களை யாழ்ப் பாணத்தில் தெரியாத இலக்கியக்காரர்களே இருக்கமுடியாது. யாழ்ப்பாணத்தில் அவர் மேற்பார்வை செய்த சகோதரனின் கடையான ரேடியோஸ்பதியில்தான் எல்லா இலக்கியக்காரர்களும் சந்தித்துக் கொள்ளுவோம். தகவல்களைப் பரிமாறிக் கொள்ளுவோம். இன்று அவர் பயணம் செய்தவிமானத்துடன் காணாமல் போய்விட்டார். அண்மையில் இங்கிலாந்தில் இருந்து வந்தஒரு எழுத்தாளர் என்னைச் சந்தித்த பொழுது தான் ஐயரிடம் ‘குலசிங்கத்திற்கு தொகுப்புகள் அனுப்புகின்றீர்களா, தொடர்புகள் இருக்கின்றதா?’ என்று கேட்ட பொழுது ‘அவருடன் தொடர்புகள் இல்லை. முகவரியும் தெரியாது’ என்றாராம். நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் போரினால் அங்கும் இங்கும் அலைந்திருப்போம் எந்த முகவரியில் நான் இருக்கின்றேன் என்பதை அவரால் அறிந்தகொள்ள முடியாது தானே. பல நண்பர்கள் புலம்பெயர் சஞ்கைகளில்
எனது கடிதங்களை கட்டுரைகளை பார்த்துதொடர்புகளைப் புதுப்பித்துக் கொண்டார்கள். ஏனோ எனக்கும் ஐயருடைய முகவரி தெரியவில்லை.
இவ்வளவு புத்தகங்களைப் பார்க்கும்பொழுது மிகச் சந்தோசமாக இருக்கின்றது. இவற்றையெல்லாம் உடனேயே வாசிக்க வேண்டும் போல் இருக்கின்றது. இவற்றைச் சேகரிப்பதற்கு நீங்கள் பல கஷ்டங்களை அனுபவித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். சிலவற்றைச் சொல்லமுடியுமா?
ஏதோ வாங்கி வாசித்தேன். அதைப் பத்திரப்படுத்தி வைத்தேன். இன்று பலருக்கு அது பயன் தருகின்றது. எனது மனதுக்கும் சந்தோசமாயிருக்கின்றது. ஏதோ நான் என்னைச் சூழ்ந்தவர்களுக்கும் நல்லதைச் செய்திருக்கின்றேன். அன்று நான் சிறுக சிறுக சேர்த்ததை இன்று பார்க்கும் பொழுது சந்தோசமாகத்தான் இருக்கின்றது. ஒரு நண்பர் சொன்னார், முத்திரை சேர்ப்பதற்கும் புத்தகங்கள் சேர்ப்பதற்கும் என்ன வித்தியாசம் இரண்டுமே ஒன்றுதான் என்று. அன்று தேள் போல் கொட்டியது நெஞ்சில், ஆனால் உங்களைப் போன்ற சிலரின் வார்த்தைகள் அதிலிருந்து என்னை மகிழ்ச்சியுறச் செய்தது. சிலவற்றை நினைத்துப் பார்க்கும் பொழுது சந்தோசமாகவும் இருக்கின்றது துக்கமாயும் இருக்கின்றது. நண்படைய புத்தகத் தட்டில் இருந்த மார்க்ஸ் எங்கல்ஸ் நினைவுக் குறிப்புகள் என்ற புத்தகத்தை எடுத்து வாசித்துப்போட்டுத் தருகின்றேன் என்ற பொழுது இதெல்லாம் வீட்டுக்குக் கொண்டுசெல்லத் தரமுடியாது என்றார். ஏதோ ஒருவித வேதனையை மனதில் தந்தது. இனிமேல் புத்தகம் வாசிப்பதென்றால் நான் காசு கொடுத்து வாங்கி வாசிப்பது அல்லா விட்டால் வாசிப்பதில்லை என்று நினைத்துக் கொண்டேன். அப்பொழுது நான் வரைபடக் கலைஞனாவதற்கு படித்துக் கொண்டிருந்த காலம் என் தந்தையார் எனது காலை, மதியச் சாப்பாட்டுக்கு இரண்டு ரூபாய் தருவார். காலையில் சாப்பிடுவேன். மதியம் ஒரு டீயும் ஒரு வடையும் 25 சதத்திற்குச் சாப்பிடுவேன். மீதம் ஒரு ரூபாய் எழுபத்தைந்து சதம் கையில் கிடைக்கும். ஒரு வாரம் சேர்ந்ததும் அதைக் கொண்டு புத்தகங்கள் வாங்குவேன். சுப்பு ரெட்டியாரின் கவிதையனுபவம் எனும் புத்தகத்தை வாங்குவதற்கு விரும்பினேன். அதன் விலை பன்னிரண்டு ரூபா ஐம்பது சதம். ஆனால் ஒருநாளும் அத்தொகை என் கையில் சேர்ந்ததில்லை. பத்து ரூபா பதினொரு ரூபா சேரும்பொழுதே வேறு ஏதாவது புத்தகத்தைப் பார்த்துவிடுவேன். அதை வாங்கிவிடு என்று மனம் அரித்துக்கொண்டிருக்கும் வாங்கிவிடுவேன், இன்று
வரை கவிதையனுபவம், வாங்கவே முடியவில்லை. ஒரு சம்பவத்தைச் சொல்லலாம் என நினைக்கின்றேன். 1967 கல்கியில் ஜெகசிற்பியன் எழுதிய ஜீவகீதம் என்னும் தொடர்கதை வந்துகொண்டிருந்தது. அதன் நாயகன் சபேசன் தாகூரின் ‘கனிகொய்தல்’ என்னும் கவிதைத்தொகுதியை வாசித்துக் கொண்டிருக்கின்றான். கவிதை வரிளையும் பிரசுரித்திருந்தார்கள். அதை வாசித்தவடன் உடனேயே அதை வாங்கி வாசிக்க வேண்டுமென்ற மன உந்துதலினால் நானும் என் நண்பரும் காங்கேசந்துறையிலிருந்து யாழ்ப்பாணம் சென்று ஸ்ரீ லங்கா புத்தக சாலையில் பல மணி நேரம் தேடி ‘கனிகொய்தல்’ என்ற அந்தக் கவிதைத்தொகுதியை வாங்கினோம். அதன் விலை இரண்டு ரூபா இருபத்தைந்து சதம். அதை வாங்கச் செல்வதற்கு செல வழித்த தொகை பத்து ரூபாய். ரவீந்திரனாத் தாகூருடனேயே வாழ்ந்து ஒன்றாகத் திரிந்த வி.ஆர் .எம்.செட்டியர் என்பவர் அதை மொழிபெயர்த்திருந்தார். அதைத்தொடர்ந்து கீதாஞ்சலி, காதல் பரிசு, தாகூரின் வசன கவிதைகள் என்று தொகுப்புக்களை வாங்கினேன். புத்தகங்களை வாங்குவது, சேகரித்து வைப்பது எல்லாம் பெரிய செயலல்ல. புத்தகங்களை திருட்டு போகாமல் பாதுகாப்பதே மிகப் பெரிய வேலையாக இருக்கின்றது. என்னுடைய நல்ல புத்தகங்களையெல்லாம் இரண்டு கலாநிதிகள் தங்களுடமையாக்கிக் கொண்டார்கள். ஒருவர் கிழக்கிலிருக்கும் தமிழ்க்கலாநிதி, தமிழ் இலக்கிய வரலாறு, தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட உபநிஷத் தொகுப்புகள் மற்றும் விமர்சன நூல்களையெல்லாம் உங்களிடமிருந்தால் என்ன என்னிடமிருந்தால் என்ன என்று சொல்லிக்கொண்டு ஊரில் இருந்தவர். கிழக்கே போகும் போது தன்னிடம் மட்டுமே இருக்கட்டும் என்று கொண்டு சென்றார். சென்னையில் ஒரு மகாநாட்டில் சந்தித்தபொழுது நான் சேகரித்த புத்தகங்கள் என்னூரைச் சேர்ந்தவர்களுக்குச் சேருவதுதான் என் ஆவல் என்று கூறிய பொழுது ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்தார். அட! அசடே உன்னிடம் புத்தகங்களை வாங்கியது உனக்குத் திருப்பித்தரவா என்று கேட்பதைப்போல் இருந்தது. லண்டனில் இருக்கும் வைத்தியக் கலாநிதி மற்றவர் அவர். என்னிடமிருந்த பிகாசோவின் ஓவியங்கள், ரஷ்யப் புரட்சியின் காட்சிகளை ஸ்கெட்ஜஸ் செய்யப்பட்ட ஓவியப் புத்தகங்களையும் தமிழில் வெளி வந்த மனோதத்துவவியல் புத்தகங்களையும் தனதாக்கிக் கொண்டார். இவற்றையெல்லாம் நான் ஏன் சொல்லுகிறேன் என் றால் நான் கேட்டுக்கேட்டு களைத்துவிட்டேன். இந்த நேர்காணலை அவர்கள்
பார்த்தாலும் அல்லது காற்று வெளியில் யாராவது சொல்லக் கேட்டு திருப்பிய அனுப்பமாட்டார்களா என்ற பேராசையில் தான். என்னவோ தெரியவில்லை, நண்பர்கள் 100 ரூபா 200 ரூபா வாங்கினால் அதை குறித்த தவணையில் கொண்டுவந்து தந்து விடுவார்கள். தங்கள் நாணயம் தவறக் கூடாது என்பதற்காக. ஆனால் 500, 600 ரூபா பெறுமதியான புத்தகங்களை வாங்கி சென்று பலமாதங்கள் ஆனபின் திருப்பித் தரவில்லையே தாருங்கள் என்று கேட்டால் சும்மா ஒரு புத்தகத்தைத் தந்து விட்டு கரைச்சல்படுத்துகின்றார் என்று மற்ற நண்பர்களுக்குச் சொல்லி அங்கலாய்கின்றார்கள். நாணயம் என்பது மற்றெல்லாவற்றுக்குமே ஒழிய புத்தகங்களுக்கில்லையோ?