ஈழத்தின் முற்போக்கு இலக்கியமும் பிரேம்ஜியும் - கலாநிதி நா. சுப்பிரமணியன்

தோற்றுவாய்: ‘பிரேம்ஜி’ என்ற புனைபெயர் தாங்கிய திரு.ஸ்ரீகதிர்காம தேவஞானசுந்தரம் அவர்கள் (17-11-1930), ‘இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ என்ற அமைப்பின் செயலாளராக ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் தொடர்ந்து செயற்பட்டு வந்துள்ளவர். அப்பொறுப்பின் அடிப்படையில் மேற்படி இலக்கிய இயக்கத்தின் செயல்திட்டங்களை வகுப்பதிலும் அவ்வாறு வகுக்கப்பட்ட திட்டங்களைச் செயல்வடிவம் பெறச்செய்து சமூகத்தளம் நோக்கி இட்டு வருவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்து வந்துள்ளவர், அவர். அவ்வாறான செயற்பாடுகளின் ஒரு பகுதியாக அவர் எழுத்தில் பதிவு செய்தவற்றுள் ஒரு பகுதியே இங்கு ‘பிரேம்ஜி கட்டுரைகள்’ என்ற தலைப்பில் ‘நான்காவது பரிமாணம்’ வெளியீடாக நூல்வடிவில் தொகுநிலை எய்தியுள்ளன. அவரால் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட எழுத்தாக்கங்களில் பேணப்பட்ட 35 கட்டுரைகளே இந்நூலாக்கத்தில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான இந்நூலாக்கத்தில் புலப்படும் பிரேம்ஜி அவர்களின் சிந்தனைகளில் இலக்கியம் தொடர்பான சிந்தனைகளை மட்டும் மையப்படுத்திய எனது மனப்பதிவுகளை இக்கட்டுரையில் முன் வைக்கிறேன்.

இவ்வகையில் முதற்கண், திரு.பிரேம்ஜி அவர்களது இலக்கிச் சிந்தனைகளுக்கு கருத்தியல் அடிப்படையான ‘முற்போக்கு இலக்கியம்’ பற்றியதும், அது தமிழ்ச் சூழலில் ஒரு இலக்கிய இயக்கமாக உருவெடுத்த சூழல் மற்றும் அதில் திரு. பிரேம்ஜி அவர்கள் கொண்டிருந்த தொடர்பு என்பன பற்றியவையுமான சில தொடக்க நிலைக் குறிப்புகளை இங்கு முன்வைப்பது அவசியமாகிறது.

முற்போக்கு இலக்கியம், தமிழில் முற்போக்கு இலக்கிய இயக்கம், அதில் பிரேம்ஜி அவர்கள் கொண்டிருந்த தொடர்பு:

‘முற்போக்கு இலக்கியம்’ என்ற சொற்றொடர் ‘சமூகத்தை வளர்ச்சிநிலை நோக்கி முன்னெடுப்பதான உணர்வோட்டத்தின் வெளிப்பாடாக அமையும் இலக்கியம்’ என்ற பொருளைத் தருவது. இலக்கிய நிலைச் செயற்பாடுகள் என்பன அநுபவப் பகிர்வு மற்றும் சுவையுணர்வு என்பவற்றோடு மட்டும் எல்லைப்பட்டு நின்றுவிடாமல் சமூகக் குறைபாடுகள் மற்றும் முரண்நிலைகள் என்பவற்றைக் களைவதற்கான செயலூக்கத்தை வழங்குவனவாகவும் அமையவேண்டும் என்பதே இதன் பொருள் விரிவாகும். ‘இலக்கியத்துக்கு ஒரு சமூகநிலைப் பயன்பாட்டம்சம் உளது’ என்பது நமது தமிழ் மரபில் பண்டைக் கால முதலே உணரப்பட்ட ஒன்றேதான். ‘அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற் பயனே’ என்ற மரபுசார் கூற்று (நன்னூல் நூற்பா: 10) இதனை உணர்த்தும்; அதாவது ஒருவர் தமது வாழ்விலே அறத்தைப் பேணிப் பொருளீட்டுவதற்கும் அப்பொருளினூடாக இவ்வுலக இன்பத்தை முறைப்படி அநுபவிப்பதற்கும் அதன் தொடர்ச்சியாக வீடுபேறு எனப்படும் பேரின்ப நிலையை எய்துவதற்கும் வழிகாட்டி நிற்பதே நூலின் பயன் என்பது இந்த மரபின் தெளிபொருளாகும். இது சமய சார்பான சிந்தனை என்பது வெளிப்படை. இங்கே நூல் என்பது இலக்கிய ஆக்கங்களையும் உள்ளடக்கி எல்லா எழுத்தாக்க முயற்சிகளையம் சுட்டி நிற்பதாகும்.

இவ்வாறான பண்டைய மரபுசார்ந்த சமூகப் பயன்பாட்டு நோக்கினின்று இங்கு நாம் நோக்கும் ‘முற்போக்கு இலக்கியம்’ என்பது சுட்டும் சமூகப் பயன்பாட்டு நிலையானது குறிப்பிடத்தக்க வேறுபாடுடைய ஒன்றாகும். பண்டைய மரபுசார் சிந்தனையானது அறவுணர்வு மற்றும் சமய உணர்வுகளின் தளத்தில் உருவான கருத்தியல் ஆகும். அக்கருத்தியல் தனிமனித மனத்தை மையப்படுத்தியது. மனிதமனம் தன்னளவில் மாற்றமடையக்கூடியது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு போதனை முறைமையாக அமைந்த சிந்தனை அது. ஆனால், ‘முற்போக்கு இலக்கியம்’ என்ற கருத்தியலானது மனித மனத்துக்குப் பின்னால் இருந்து அதனை இயக்கி நிற்கும் சமூகத்தளத்தை மையப்படுத்தியதாகும். சமூகம் என்ற ஒட்டுமொத்த அமைப்பின் ஒரு கூறாக மட்டுமே தனிமனிதரை அது தரிசிக்கிறது. அவ்வகையில் சமூகத்தின் பொதுநிலைத் தேவைகளுக்பேற்ப தனிமனிதர்களான இலக்கியவாதிகளின் உணர்வு நிலைகள் குவிமையப்பட்டு இயங்கவேண்டும் என்பதே முற்போக்கு இலக்கியவாதிகளின் நிலைப்பாடாகும். இந்த அடிப்படையிலே இலக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது அவை அநுபவ வெளிப்பாடு சுவையுணர்வு ஆகிய எல்லைகளைத் தாண்டி சமூக நலன் நோக்கிய செயற்பாடுகளுக்கான இயக்கு சக்திகளாக, கருவிகளாகவும் வடிவம் எய்திவிடுகின்றன. இவ்வாறான முற்போக்குச் சிந்தனைக்கான அடிப்படை உணர்வாக அமைந்தது துன்ப துயரங்களும் ஏற்றத்தாழ்வுகளும் அற்ற சமூக வாõழ்வியலைக் கடடமைக்க வேண்டும் என்ற எண்ணப்பாங்காகும். இதற்கான செயன்முறைத் தத்துவ அடிப்படையாக அமைவது ‘மார்க்சியம்’ என்ற சமூக அறிவியல் ஆகும். சமூக வரலாற்றை வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகக் காணும் அத்தத்துவம் அடக்கியொடுக்கப்பட்ட அடிநிலை மாந்தரின் விடிவுக்கான வழிமுறைகளை முன்வைத்துச் சமநிலைச் சமூக அமைப்பு முயற்சிக்கு வழிகாட்டி நிற்பது. தொழிலாளர் மற்றும் விவசாயிகள் எனப்படும் உடலுழைப்பாளர்களும் ஒடுக்கப்பட்ட மாந்தரும் தம்மளவில் இணைந்து செயற்படுவதன் மூலம் தம்மை அடக்கியொடுக்கும் மேல்தட்டு வர்க்கத்தினரின் அதிகாரமையங்களின் அடக்குமறைகளினின்று விடுபடமுடியம் என்பதை உணர்த்தி நிற்கும் செயன்முறைத் தத்துவம் இது. இத்தத்துவ சார்பால் சமூக உணர்வு பெற்ற இலக்கியவாதிகளின் கூட்டுச் சிந்தனையாகவே ‘முற்போக்கு இலக்கியம்’ என்ற கருத்தியல் உருப்பெற்றது; பெறலாயிற்று. ஆங்கிலத்தில் ‘Progressive Literature’ என்பதன் தமிழாக்கமாக இச்சொற்றொடர் தமிழில் பயிற்சிக்கு வந்துளது. இந்திய மண்ணில் 1930களின் நடுப்பகுதியில் (1935-36 காலப் பகுதியில்) ‘அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ உருவாகியது. அதன் தொடர்பால் 1940களில் தமிழகச் சூழலிலும் ஈழத்திலும் மேற்படி ‘முற்போக்கு இலக்கிய’க் கருத்தியல் பரவியது. இதன் தொடர்ச்சியாக 1946இல் ‘இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ உருவாகியது. இவ்வமைப்பானது தொடர்ச்சியாகச் சிறப்பாக இயங்க முடியாதிருந்த சூழலில் எட்டு ஆண்டுகளின் பின்னர் 1954இல் (27-06-1954) அச்சங்கம் மீள அமைக்கப்பட்டது. அவ்வமைப்பின் பொதுச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டு, ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மேலாக அப்பொறுப்பில் தொடர்ந்து இயங்கிவந்தவர் என்ற வகையிலேயே திரு. பிரேம்ஜி அவர்கள் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முக்கிய பங்களிப்பாளராக அமைகிறார். இவ்வாறான பங்களிப்புகள் தொடர்பான ஆவணங்களாகவே அவருடைய மேற்படி கட்டுரையாக்கங்கள் அமைகின்றன.

பிரேம்ஜி கட்டுரைகளின் உள்ளடக்க அமசங்கள் மற்றும் அவற்றின் வரலாற்று முக்கியத்துவம்:

பிரேம்ஜி அவர்களின் இவ்வாறான இயக்கநிலைச் செயற்பாடுகளில் ஒரு கூறாக வெளிப்பட்ட அவருடைய கட்டுரையாக்கங்களில் ஒருவகையின கொள்கை விளக்க அறிக்கைகளாக அமைந்தனவாகும். இவற்றுட் சில இலக்கிய ஆய்வரங்குகளில் நிகழ்த்தப்பட்ட உரைகளாகும். இன்னொரு வகையின ஈழத்து இலக்கிய வளர்ச்சி பற்றி அவ்வப்போது எழுதப்பட்டு இதழ்களில் பதிவுபெற்றவையாகும். நூல்களுக்க எழுதப்பட்ட முன்னுரைகளாக அமைந்தவையாகும். விமர்சனம் மற்றும் நேர்காணல் ஆகிய வகைகளிலான இருபதிவுகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

கொள்கை விளக்க அறிக்கைகள் என்றவகையில் அமைந்தவைக்குச் சான்றுகளாக, முற்போக்கு இலக்கியம் ஓர் அறிமுகம் (இலங்கை முற்போக்க எழுத்தாளர் சங்க முதலாவது மாநாட்டில் சமர்ப்பித்த அறிக்கை -1957), சரியான கோட்பாடுகள் தவறற்ற நிலைப்பாடுகள் (இ.மு.எ.ச. இரண்டாவது மாநாட்டு உரையிலிருந்து - 1963), ஈழத்துத் தமிழ்ச் சஞ்சிகை - பிரசினைகளும் தீர்வும் (ஈழத்து தமிழ்ச் சஞ்சிகைகளது ஆசிரியர்கள், வெளியீட்டாளர்கள் மாநாட்டு அறிக்கையிலிருந்து - 1972), வரலாறு மெய்ப்பித்துள்ள இலக்கிய தரிசனமும் எதிர்காலக் கடப்பாடுகளும் (புதுமை இலக்கியம் மலர் - 1996), முற்போக்கு இலக்கியம்: சித்தாந்த நெருக்கடிகளும் முன்போதலுக்கான வழி மார்க்கங்களும் (‘விபவி’ கருத்தரங்க உரை 1996 ), இலக்கிய விமர்சனமும் மறுமதிப்பீடும் (மல்லிகை ஆண்டுமலர் - ஆண்டு தரப்படவில்லை)முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

ஈழத்து இலக்கிய வளர்ச்சி தொடர்பான சிந்தனைகள் என்ற வகையில், இலக்கிய வளர்ச்சி: பிரசினைகளும் தீர்வுகளும் (அறிக்கை நிலையில் அமைந்த இக்கட்டுரையின் முதற்பிரசுர விபரம் தரப்படவில்லை), நாவலர்: தேசிய சிந்தனையின் மூலவர் (1971), தேசிய - மக்களியக்க முன்னோடி (நாவலர் பெருமான் 150ஆவது ஜெயந்தி மலர் -1972) முதலியவற்றைச் சுட்டலாம்.
நூல்களுக்கு எழுதப்பட்ட முன்னுரைகள் என்றவகையில் இலக்கியம் தொடர்பானவை: உள்ளடக்கமும் உருவமும் (நீர்வை பொன்னையனின் ‘மேடும் பள்ளமும்’ சிறுகதைத் தொகுதிக்க எழுதப்பட்டது - 1954), ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும் (சுபைர் இளங்கீரனின் ‘ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும்’ என்ற நூலுக்கு எழுதப்பட்டது - 1994)

இலக்கிய விமர்சனம் என்ற வகையில் அமைந்த கட்டுரை: பாரதியும் பாரதிதாசனும்: ஓர் ஒப்பு நோக்கு (சுதந்திரன் ஏப்ரல் 1956)
நேர்காணல்: இலக்கியத்தின் சமூக, தேசியக் கடமைகள் - லெ.முருகபூபதி (வீரகேசரி - திகதி தரப்படவிலலை).

மேற்குறித்தவாறு பல நிலைகளிலும் அவர் பதிவு செய்த இலக்கியம் பற்றிய கருத்துகளின் பரப்பில் இரு அம்சங்கள் முனைப்பாக வெளிப்பட்டுள்ளமையை நோக்கமுடியும். ஓன்று ‘முற்போக்கு’ என்ற அம்சம்; இன்னொன்று ‘தேசியம்’ என்ற அம்சம். ‘முற்போக்கு’ அம்சத்தின் அடிப்படையிலே சாதி மற்றும் பொருளியல் ஏற்றத்தாழ்வுகளற்ற சமநிலைச் சமுதாயத்தைக் கட்டமைப்பதற்கான திசை வழியை நோக்கி இலக்கியவாதிகள் நடைபயில வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தி நிற்கிறார். அதற்கான செயல்திட்டங்களையும் முன்வைக்கின்றார். ‘அத்திசையிலே சரியான வழியிலேதான் நடைபயில்கிறோமா?’ என்ற வினாவை அடிக்கடி எழுப்பி விடைகாண, திருப்திகாணவும் அவர் முற்படுகிறார். இவ்வாறான முற்போக்கு இலக்கியத்துக்கான படைப்பியல் முதல்வராகத் தமிழகத்தின மகாகவி பாரதியை அவர் இனங்காட்ட முற்படுகிறார்.

அதேவேளை தேசியம் என்ற வகையிலே தமிழகத்தின் ‘தொப்புள்கொடி’ உறவிலிருந்து ஈழத்திலக்கியம் விடுபட்டுத் தனித்தன்மை கொண்டதாகத் திகழவேண்டுமென்பதையும் வலியுறுத்துகிறார். அவ்வாறான ஈழத் தமிழ்த் தேசியத்துக்கு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார் எனச் சான்றுகளுடன் எடுத்துரைக்கிறார். ஈழத்தில் இலக்கிய இதழ்கள் மற்றும் படைப்பாக்க முயற்சிகள் சிறப்பாக வளர்வதற்கான திட்டங்களை முன்வைக்கின்றார்.

இவ்வாறான கருத்துகளின் முக்கியத்துவத்தினைப் புரிந்துகொள்வதற்கு ஈழத் தமிழிலக்கியத்தின் கடந்த, ஏறத்தாழ 60 ஆண்டுக்கால, அதாவது 1950கள் தொடக்கமான வரலாற்றைப் பார்வையிட வேண்டும். ஈழத்தில் நவீன தமிழிலக்கியம் மரபின் பிடியிலிருந்து படிப்படியாக விடுபட்டு முகங்கொள்ளத் தொடங்கிய காலப்பகுதி அது. தமிழகத்தில் ராஜமையர், பாரதி, புதுமைப்பித்தன் முதலியவர்களின் எழுத்துகளில் 1890 - 1940 காலகட்டத்தில் மரபிலிருந்து நவீன இலக்கியச் செல்நெறிக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், ஈழத்தில் 1930 - 1940களிலேயே இவ்வாறான மாற்றம் நிகழத் தொடங்கியது. 1930களின் முன்பே மங்களநாயகம் தம்பையாவின் ‘நொறுங்குண்ட இருதயம்’ (1914), பாவலர்துரையப்பா பிள்ளையின் (-1929) பாடல்கள் முதலியவற்றில் நவீனத் தமிழ் இலக்கியச் சாயல்கள் புலப்படத் தொடங்கிவிட்டன; எனினும், 30 - 40களிலேயே நவீன இலக்கியம் என்ற உணர்வுத் தெளிவுடனான படைப்பாக்கமுறை ஈழத்தத் தமிழ்ச் சூழலில் உருவாகியது. (இது தனியான ஒரு கட்டுரையில் எடுத்துப் பேசப்பட வேண்டிய வரலாற்றம்சமாகும்)
இவ்வாறு ஈழத்தில் நவீன இலக்கிய உணர்வு முளைவிடத் தொடங்கிய சமகாலத்திலே, திட்டவட்டமான ஒரு இயக்கநிலை சார் கோட்பாட்டு முறைமையாக முன்வைக்கப்பட்டது, முற்போக்கு இலக்கியக் கோட்பாடேயாகும். அதனால், கடந்த 60 ஆண்டுக்கால ஈழத்து நவீன தமிழிலக்கிய வரலாறானது முற்போக்கு இலக்கியம் என்பதை மையப்படுத்தியதாக அமைய நேர்ந்தது. அதனைச் சார்ந்து அல்லது அதனை விமர்சித்து இலக்கியச் செல்நெறியை வழிநடத்த வேண்டிய நிலையே இக்காலப்பகுதியின் ஈழத்து இலக்கியவாதிகளுக்கு ஏற்பட்டது. திரு.பிரேம்ஜி அவர்கள் புலப்படுத்தியுள்ள இலக்கியம்சார் கருத்தோட்டங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை மேற்படி வரலாற்றுப் பின்புலத்திலேயே நாம் தெளிந்துகொள்ளவேண்டும். ‘முற்போக்கு எழுத்தாளர் சஙக’த்தின் செயலாளர் என்ற வகையில் ஈழத்தின் இலக்கிய வரலாற்றுப் போக்கைத் திட்டமிட்டு வழிநடத்தும் முக்கிய பொறுப்பில் இருந்து செயற்பட்டவர், அவர். இவருடன் இச்செயற்பாட்டில் இணைந்து நின்று செயற்பட்டவர்கள் என்றவகையில் கே.இராமநாதன், கே.கணேசலிங்கம், கலாநிதிகள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, இ.முருகையன் முதலிய பலரைக் சுட்டலாம். இவர்கள் அனைவரும் மார்க்சிய தத்துவச் சார்பினர். இவர்களில் முதலிருவரும், முதலில் - 1946இல் - இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தோற்றவித்தவர்களுமாவர். இவ்வகையில் பிரேம்ஜி அவர்களின் எழுத்துகளாக, அதாவது முற்போக்கு இலக்கியம் சார் கருத்துநிலைகளாக இந்நூலில் இடம்பெற்றவற்றின் உள்ளடக்க அம்சங்கள் அவரின் சொந்த தனிமனித மூளையின் உருவாக்கங்களல்ல என்பதும் சமகாலத்தில் முற்போக்குச் சிந்தனையாளர்களாகத் திகழ்ந்த மேற்சுட்டிய பலரின் கூட்டு மனத்தின் உருவாக்கங்களே என்பதும் இங்கு சுட்டப்படவேண்டியனவாகும்.
அதே வேளை இவற்றைச் சிந்தாமற் சிதறாமல் எழுத்து நிலையில் பதிவுசெய்த வகையிலும் தொடர்ந்து அத்தொடர்பில் சிந்தித்துவந்த வகையிலும் திரு. .பிரேம்ஜி அவர்கள் ஒரு பொறுப்புள்ள இயக்கச் செயற்பாட்டாளராகத் தமது பணியை ஆற்றியவர் என்பது இலக்கியவாதிகளால் பாராட்டப்படவேண்டிய அம்சமாகும். இவ்வாறு அவரது சிந்தனை மற்றும் செயலூக்கம் என்பவற்றைப் பாராட்டும் அதே வேளையில், இக்கட்டுரைகளின் தொனிப் பொருள்கள் சிலவற்றின் வரவேற்கத்தக்க மற்றும் விமர்சன நோக்கில் மேலும் தெளிவை படுத்தப்படவேண்டியவையுமான அம்சங்கள் சிலவற்றை இங்கு சுட்டுவதும் அவசியமாகிறது; நோக்குவோம்.

வரவேற்கத்தக்க அம்சம் என்ற வகையில் ‘பாரதியும் பாரதிதாசனும்: ஓர் ஒப்பு நோக்கு’ என்ற தலைப்பிலான, 1956இல் எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரையில் அவர் வந்தடைந்த முடிவு பொருத்தமான ஒன்று என்பதை இங்கு முதலில் சுட்ட விழைகின்றேன். தமிழகத்தில் பாரதி தொடக்கிவைத்த கவிதைச் செல்நெறியில் முக்கிய கவிஞராகத் திகழ்ந்தவர் பாரதிதாசன் எனப்படும் கனக.சுப்புரத்தினம் அவர்கள். அவர் தாம் பாரதியின் வழியைத் தொடர்பவர் என்பதை உணர்த்தும் வகையிலேயே பாரதிதாசன் என்ற புனைபெயரைத் தாங்கியவர். இப்புனைபெயரே அவருடைய இயற்பெயர்போல நிலைத்துவிட்டது என்பது வரலாறு. இவ்வாறு அவர் தம்மைப் பாரதிதாசன் எனக் கூறிக்கொண்டாலும், கவித்துவத்துக்கு அடிப்படையான நோக்குநிலையில் அவர் பாரதியின் தாசன் அல்ல என்பதை ஒப்பியல் பார்வை மூலம் தெளிவுறுத்தியுள்ள கட்டுரை இது. இம்முடிபுக்குச் சான்றாக இருவரிடமும் நிலவிய வேறுபாடுகள் பலவற்றைப் பிரேம்ஜி அவர்கள் இவ்விமர்சனக் கட்டுரையில் எடுத்துக்காட்டியுள்ளார். பாரதி போல சமகால மக்களியக்கத்தில் தன்னை பாரதிதாசன் இணைத்துக்கொண்டவரல்ல என்பதும், எட்டநின்று கவிதை பாடுவதோடு மட்டும் நின்றுகொண்டவர் என்பதும் ஆக பிரேம்ஜி காட்டும் வேறுபாட்டம்சம் மிக முக்கியமான ஒன்றாகும் (பக். 158-59). படைப்பாளி - பொதுவாக இலக்கியவாதி - பிரச்சினைகளைப் புறநிலையாக அகன்று நின்று விமர்சிப்பவனாகவும் உபதேசிப்பவனாகவும் மட்டும் இருப்பதில் நிறைவு கொள்ள முடியாது என்ற முற்போக்குக் கருத்தியல் சார்ந்து அமைந்த விமர்சனம் இது. பிரேம்ஜி இக்கட்டுரையை 1956இல் எழுதியுள்ளார். அக்காலப்பகுதியில் இத்தகு விமர்சனப் பார்வையானது முற்போக்குச் சிந்தனை கொண்ட சிலரிடம் மட்டுமே நிலவியிருக்கமுடியும். அவ்வகையில் இப்பார்வை வரலாற்று முக்கியத்துவமுடையது.

திரு.பிரேம்ஜி அவர்களின் இலக்கியம் தொடர்பான எழுத்துகளில் கோட்பாட்டு நிலைகளாக அவர் சுட்டியுள்ள இருவிடயங்கள் இங்கு நமது தனிக் கவனத்துக்குரியன. அவற்றுள் ஒன்று, சோசலிச யதார்த்தவாதமாகும். மற்றது ‘ஜனநாயக யதார்த்தம்’ எனப்படுவது. சோசலிச யார்த்தவாதம் என்ற கோட்பாடானது, ரஷ்யாவில் மார்க்சிய அரசியல் முன்னெடுக்கப்பட்ட சூழலில் ஸ்டாலினுடைய ஆட்சியிலே அவருடைய ஆசியுடன், 1934இல் உருவாக்கப்பட்ட கருத்தாக்கமாகும். ‘உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கையூட்டிச் சோசலிசக் கட்டமைப்பை முன்னெடுக்கும்’ வகையிலான கலை, இலக்கிய ஆக்க முயற்சிகளைக் கோரிநிற்கும் கோட்பாடு இது.

இரண்டாவதான ‘ஜனநாயக யதார்த்தம்’ என்பது பற்றிக் குறிப்பிடுமிடத்து அதற்கு, ‘சமுதாயத்தின் அனைத்துக் கோணல்மாணல்களையும் பிரத்தியட்சப்படுத்துவதோடு, சமுதாயத்தின் விடுதலைக்கான வழியைக் கோடி காட்டுவதான இலக்கிய முயற்சி’ என்ற பொருள்பட திரு.பிரேம்ஜி அவர்கள் விளக்கம் தந்துள்ளார் . 1957இல் நடைபெற்ற இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க முதலாவது மாநாட்டில் சமர்ப்பித்த ‘முற்போக்கு இலக்கியம் - ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பிலான அறிக்கையில் தந்துள்ள விளக்கங்களின் (பக். 8-9) சாராம்சம் இது.

இவற்றுள் இரண்டாவதான ‘ஜனநாயக யதார்த்தம்’ என்பதே முற்போக்கு இயக்கத்தில் முன்வைக்கப்பட்டதென்பதும், முதலாவதான ‘சோசலிச யதார்த்தவாதம்’ அடுத்த கட்ட இலக்காக வரித்துக்கொள்ளப்பட்டதென்பதும் பிரேம்ஜியின் எழுத்துகள் உணர்த்தும் செய்திகளாகும் (பக்.128). இவ்வாறாக பிரேம்ஜி அவர்கள் குறிப்பிட்டுள்ள கோட்பாட்டம்சங்களைத் தெளிந்துகொள்வதற்கும் அவை ஈழத்து முற்போக்கு இலக்கிய சிந்தனையின் செல்நெறியிலே பேணப்பட்ட முறைமையைத் தெரிந்துகொள்வதற்கும் சில மேலதிக வரலாற்றுக் குறிப்புகளை இங்கு முன்வைக்க வேண்டியது அவசியமாகிறது.

கோட்பாட்டு அம்சங்களும் அவை பேணப்பட்டுள்ள முறைமைகளும் - ஒரு வரலாற்றுக் குறிப்பு:

1940 - 50களில் தமிழ்ச் சூழலில், தமிழகத்திலும் ஈழத்திலும், முற்போக்கு இலக்கியம் என்ற சிந்தனை பயிலத் தொடங்கியபோது அதன் அழகியல் தொடர்பான தெளிவான சிந்தனைகள் கலை இலக்கியவாதிகளின் முன்னர் முன்வைக்கப்படவில்லை என்பது, இங்கு நாம் மனங்கொள்ளவேண்டிய முக்கிய செய்தியாகும். காரணம், முற்போக்குச் சிந்தனைக்கான அடித்தளமாக அமைந்த மார்க்சியம் என்ற தத்துவமானது அடிப்படையில் ஒரு பொருளியல் மற்றும் அரசியல் தத்துவமாக மட்டும் அமைந்திருந்தமையேயாகும். மார்க்சிய மூலவர்களான கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் ஏஞ்சல் மற்றும் லெனின் முதலியோர் கலைசார் பார்வைகள் சிலவற்றை தத்தம் எழுத்துகளில் ஆங்காங்கே தெரிவித்திருந்தனர் எனினும் அப்பார்வைகள் அவர்களது காலப் பகுதியில் முழுநிலையிலான கோட்பாட்டு வடிவத்தை எய்தியிருக்கவில்லை என்பதே வரலாற்றுண்மையாகும். கலையானது தனக்கெனத் தனியான கோட்பாட்டம்சங்களைக் கொண்டது என்பதனை லேவி ட்ராஸ்கி முதலிய சில மார்க்சியவாதிகள் உணர்ந்திருந்தனர் என்பதும் இங்க குறிப்பிடப்பட வேண்டியது அவசியம்.

இந்நிலையில்தான் 1934இல் ஸ்டாலின் ஆசியுடன் சோசலிச யார்த்தவாதம் என்ற கலைக்கோட்பாடு ரஷ்யாவில் உருவாக்கப்பட்டது. ‘உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கையூட்டிச் சோசலிசக் கட்டமைப்பை முன்னெடுக்கும்’ நோக்கில் உருவான இக்கோட்பாடு, அன்றைய ரஷ்யாவில் மார்க்சிய அரசியல் முன்னெடுக்கப்பட்ட சூழலின் தேவைகளைக் கருத்துட்கொண்ட ஒரு அரசியல் சார்பு நடவடிக்கையாகவே அமைந்ததாகும். உள்ளடக்கம் என்ற சமூக அம்சத்துக்கு முதன்மை வழங்கிய நிலையில், படைப்பாளியின் ‘அநுபவநிலை’ மற்றும் ‘அழகியல்’ எனப்படும் உருவநிலை என்பன சார் அடிப்படை அம்சங்களுக்க உரிய முக்கியத்துவம் தராத - படைப்பாளியின் மனவுலகம், சுயதேர்வுச் சுதந்திரம் முதலானவற்றை பொருளற்றவையாக்குவதான - ஒரு கோட்பாடு இது.

ரஷ்யாவில் அதிகாரத்தைக் கைப்பற்றிய மார்க்சியர் அவ்வதிகாரத்தைப் பலப்படுத்துவதற்காகவும் பிற நாடுகளிலிருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்களிலிருந்து தற்காத்துக்கொள்வதற்காகவும் கலை, இலக்கியம் உட்பட அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தனர். சமூக மாந்தரின் மனதை வென்றெடுக்க வேண்டிய தேவை இருந்தது. இச்சூழலின் விளைபொருளாக அமைந்ததே மேற்படி சோசலிச யார்த்தவாதம் என்பது நாம் மனங்கொள்ளவேண்டிய முக்கிய வரலாற்றம்சமாகும்.
மேற்படி கோட்பாட்டுக்கு மாறாக ‘அழகியல்’ என்ற அம்சத்துக்கு உரிய முக்கியத்துவம் தரும் வகையிலான மார்க்சிய சிந்தனைகள் ரஷ்யாவுக்கு அப்பாலான ஐரோப்பியச் சூழலில் 1940 - 70 காலப் பகுதியில் தனி வளர்ச்சி எய்தின. இவ்வகையில் ஜேர்ர்ஜ் லுடகாக்ஸ், அந்தோனியோ கிராம்சி, ரூபர்ட் மார்க்யூஸ், பியர்மெஸ்ரீரி முதலிய பலரின் கருத்துகள் முக்கியமானவை. ‘இலக்கியத்தின் உண்மையான சமூகக்கூறு அதன் உள்ளடக்கமன்று உருவமே’, என்ற லுடகாக்ஸின் கூற்று அழகியலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகும். இவ்வாறான பார்வை மற்றும் அணுகுமுறை என்பவற்றிலே, ‘படைப்பாளி எந்த வர்க்கச் சார்பில் நின்று எந்த நோக்கில் படைப்பை மேற்கொள்கிறார்?’ என்பதைவிட ‘அவருடைய படைப்பினுடாகச் சமூக யதார்த்தம் சரியாகப் பதிவுபெற்றள்ளதா?’ என்பதே முக்கியம். இப்பார்வைகள், அணுகுமுறைகள் என்பன பொதுவாக பார்வை விமரிசன யதார்த்தம் என வழங்கப்படுவன.

இவ்வாறு அழகியலுக்கு முதன்மைதரும் மார்க்சிய சிந்தனைகள், மார்க்சிய தத்துவம் அதிகாரத்தில் இல்லாத, ஆனால் அதிகாரத்தைப் பெறுவதற்கு முயன்று கொண்டிருந்த - முயன்று கொண்டிருக்கும் - சூழல்களின் - குறிப்பாக ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகியநாடுகளின் - மார்க்சியச் சிந்தனையாளர்களின் வெளிப்பாடுகளாக அமைந்தவையாகும். ரஷ்யச் சூழல் மக்களுக்கு மார்க்சியச் சார்பான அறிவூட்டுவதை முதன்மைப்படுத்தியது. அழகியல் சார்பான, ஆழமான விவாத நிலையிலான சிந்தனைகளுக்கு அங்கு வாய்பிருந்ததா என்பது தெரியவில்லை. மேற்சுட்டிய ஐரோப்பிய நாடுகளின் சூழல்கள் மார்க்சிய அழகியல் பற்றிய தேடலுக்கும் விவாதங்களுக்கும் விரிவான இடமளித்தன. மார்க்சிய அழகியல் உருவாகி வளர்ந்த வரலாற்றின் சுருக்க அறிமுகம் இதுதான்.

இந்தியா - இலங்கை ஆகிய நாடுகளில் முற்போக்கு இலக்கியம் என்ற சிந்தனை அறிமுகம் எய்தியபோது, - 1940-50கள் காலப் பகுதியில் - ரஷ்ய சூழலுக்கு அமைவானதாக உருவான சோசலிச யார்த்தவாதம் என்ற கோட்பாட்டை மையப்படுத்திச் சிந்திக்க வேண்டிய நிலையிலேயே மார்கசியவாதிகள் இருந்தனர். தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரை மார்க்சிய இலக்கியப் பார்வையானது முதலில் (1940 - 60களில்) சோவியத் ரஷ்யச் சூழல் சார் அநுபவங்களின் ஊடாகவே அறிமுகமானது என்பதே நாம் இங்கு கருத்துட் கொள்ளவேண்டிய அம்சமாகும். இவ்வாறு அறிமுகமான சந்தர்ப்பத்தில் அப்பார்வை, அணுகுமுறை என்பன மார்க்சிய அரசியலின் - சமுதாய மாற்றத்துக்கான புரட்சி என்ற கருத்தியலின் - பிரசாரம் என்ற முகத்தையே காட்டி நின்றது. ஐரோப்பிய நாடுகளில் உருவாகி வந்த விமர்சன யதார்த்த சிந்தனைகள் அக்காலப் பகுதித் தமிழ்ச் சூழலில் உரிய அறிமுகத்தை எய்தியிருக்கவில்லை. அவை ஏறத்தாழ எழுபதுகளிலேயே தமிழ்ச்சூழலுக்கு அறிமுகம் எய்துகின்றன என்பது நாம் இங்கு மனங்கொள்ள வேண்டிய வரலாற்று அம்சமாகும்.

1940 -50கள் காலப் பகுதியில் தமிழ்ச் சூழலுக்கு அறிமுகமாகிய சோசலிச யார்த்தவாதம் சார் பார்வையானது, அக்காலப்பகுதித் தமிழச் சூழலுக்கு நடைமுறைச் சாத்தியமான ஒன்றாக இருக்கவில்லை. ஏனெனில், இந்நாடுகளில் ரஷ்யாவைப் போல முதலாளித்துவத்துக்கெதிரான, சோசலிசப் புரட்சிக்கான சூழல் நிலவவில்லை. அதற்குப் பதிலாக அந்நிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரானதும், உள்நாட்டின் சமூக ஓடுக்குமுறைகளுக்கு எதிரானதுமான புரட்சிச் சிந்தனைகளை முன்வைக்கவேண்டிய சூழலே நிலவியது. எனவேதான், தமிழகத்திலும் ஈழத்திலும் முற்போக்குப் பேசியவர்கள் சூழலுக்கு ஏற்றவகையில் யதார்த்தம் பற்றிப் பேசவேண்டியவர்களாயினர். சோசலிச யார்த்தவாதம் என்பதை இறுதி இலக்காகக் கொண்டதும், அதேவேளை அதற்குமுன் சமூகத்தின் உள்ளார்ந்த பிரச்சினைகளை இனங்காட்டுவதும், அப்பிரச்சினைகளிலிருந்து விடுபடும் வழிகளை உணர்த்தத் துணைபுரிவதுமான, ஒரு கலை இலக்கியக் கோட்பாடு முற்போக்காளர்களுககுத் தேவைப்பட்டது. இவ்வாறான தேவைகருதி திரு. பிரேம்ஜி முதலியோர் முன்வைக்கப்பட்ட ஒரு கருத்தியலாகவே ‘ஜனநாயக யதார்த்தம்’ என்ற கோட்பாட்டை நாம் இங்கு புரிந்துகொள்ள கொள்ளவேண்டும.

‘யதார்த்த இலக்கியம், மக்களின் வாழ்வை உண்மைப் பகைப்புலத்தில் பிரதிபலிக்கிறது. ஜனநாயக யதார்த்த இலக்கியம், யதார்த்த இலக்கியத்தைப்போலவே சமூக யதார்த்தத்தைச் சித்திரிக்கிறது. ஆனால், அதோடு நின்றுவிடாமல் இந்தச் சமுதாயத்தின் விடுதலைக்கான, விமோசனத்துக்கான பாதையை, செல்மார்க்கத்தை , இந்த இலக்கியம் கோடி காட்டுகிறது’ (பக் 8-9). திரு.பிரேம்ஜி அவர்கள் ஜனநாயக யதார்த்தம் என்ற கருத்திலுக்குத் தந்துள்ள விளக்கம் இது. பொதுவான ‘யதார்த்தம்’ என்ற நிலையிலிருந்து வேறுபடுத்தும் ஒரு குறிப்பாக மட்டுமே இக்குறிப்பு அமைவதை இங்க நோக்கமுடிகிறது. யதார்த்தம் என்பது சமூகத்தின் உண்மை நிலையைப் பிரதிபலிப்பது என்பதும், ‘ஜனநாயக யதார்த்தம்’ என்பது அந்த உண்மைநிலையைக் காட்டுவதற்கு மேலாக அவ்வுண்மைநிலையூடாக உணரப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காட்டுவதாகவும் அமைவது என்றும் இந்த விளக்கம் அமைகிறது.

இவ்வாறு பிரேம்ஜி அவர்களால் குறிப்பிடப்படும் ஜனநாயக யதார்த்தம் என்ற கோட்பாடும், சோசலிச யதார்த்தவாதம் போல அடிப்படையிலே உள்ளடக்கத்துக்கு முக்கியத்துவம் தந்த ஒரு சிந்தனைதான்; உருவம் மற்றும் அதற்கும் சமூகத்துக்குமள்ள உறவு என்பன பற்றியெல்லாம் அது விரிவாக எடுத்துரைக்க முற்பட்டதன்று என்பது இங்க மனங்கொள்ளவேண்டிய முக்கிய செய்தியாகும். இதனால், ‘உள்ளடக்கமே இலக்கியமாகிவிடும்’ எனத் தவறாகக் கருதும் நிலை முற்போக்குவாதிகள் பலரிடையில் அன்று உருவாகத் தொடங்கியது. பிரசாரப் பண்புடையனவும் இலக்கியத் தரமற்றனவுமான ஆக்கங்களும் பரவலாக வெளிவரத் தொடங்கின. அதனால், முற்போக்கு இலக்கியவாதிகள் இலக்கியத்தின் உருவத்தைப் புறக்கணிக்கின்றனர் என்ற வகையிலான விமர்சனங்களும் வெளிப்படலாயின. இத்தகு சூழ்நிலையில் இலக்கியத்தின் அழகியல் - அதாவது உருவநிலை - பற்றியும் வலியுறத்தவேண்டிய கடப்பாடு அன்றைய முற்போக்காளருக்கு ஏற்பட்டது. திரு.பிரேம்ஜி அவர்கள் இக்கடப்பாட்டை உணர்ந்திருந்த ஒருவர் என்பதை நீர்வை பொன்னையனின் மேடும் பள்ளமும் (1954) என்ற சிறுகதைத் தொகுதிக்கு அவர் அளித்த முன்னுரையில் இடம்பெறும், ‘முற்போக்கு எழுத்தாளர்கள் மீது, உள்ளடக்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் எழுத்தாளர்கள் மீது, இலக்கிய உருவத்தையும் இலக்கியத் தரத்தையும் உதாசீனம் செய்வதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது. இது முற்றிலும் தவறு. வெறும் கருத்துகளும் உள்ளடக்கமும் இலக்கியமாகிவிடுவதில்லை; இவை இலக்கிய உருவத்தைப் பெறும்போது தான் இலக்கியமாகின்றன…இலககியத் தரத்தைப் பெறாத எதையும் இலக்கியமாகக் கொள்ள முடியாது’ என்ற குறிப்பு (பக்.16) தெளிவாக உணர்த்தி நிற்கிறது.

முற்போக்கு சிந்தனை வரலாற்றில் கருத்தியல் முரண் நிலைகள் - சில வினாக்கள்:

இக்கட்டுரையை நிறைவு செய்யும் நிலையில் பிரேம்ஜி அவர்கள் முன்வைத்த முற்போக்குக் கருத்தியலைப் புரிந்தகொள்வதில் நிகழ்ந்த சிக்கலொன்றைச் சுட்டவேண்டியது அவசியமாகிறது. 1957இல் நடைபெற்ற முற்போக்கு எழுத்தாளர் மாநாட்டில் பிரேம்ஜி அவர்கள் முன்வைத்த அறிக்கையிலே முற்போக்கு அணி சாராத - அணி சாரத் தயங்கும் எழுத்தாளர்களை எதிரிகளாகக் கருதவேண்டியவர்களல்லர் என்பதும் அவர்கள் உயர்ந்த பண்போடும் பரிவோடும் அணுகப்பட்டு முற்போக்கு அணிக்கு இட்டுவரப்படவேண்டியவர்கள் என்பதும் சுட்டப்பட்டிருந்தது. (பக். 2-3) வரவேற்கப்படவேண்டிய அணுகுமுறை இது என்பதில் ஐயத்திற்கிடமில்லை. ஆனால், நடைமுறையிலே இந்த அணுகுமுறை உரியவாறு பேணப்படவில்லை என்பதே வரலாறு. 1970களின் இறுதிவரையான ஈழத்து இலக்கிய வரலாற்றிலே முக்கிய மனிதநேயப் படைப்பாளிகள் சிலர் - குறிப்பாக எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம், மஹாகவி, நீலாவணன் முதலிய முதல்வரிசைப் படைப்பாளிகள் - முற்போக்கு அணியின் முதல் தலைமுறையினரால் - குறிப்பாக கலாநிதிகள் க. கைலாசபதி, கா.சிவத்தம்பி முதலிய முற்போக்கு விமர்சகர்களால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டனர். அல்லது கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். 1970களின் இறுதியிலேயே மேற்படி நிலையில் மாற்றம் ஏற்பட்டது. முற்போக்கு அணியின் முதல் தலைமுறை சார்ந்தோரில் ஒருவரான திரு .ஏ.ஜே.கனகரத்னா மற்றும் இரண்டவது தலைமுறையினரான கலாநிதி சி.மௌனகுரு, திருமதி மௌ.சித்ரலேகா, கலாநிதி எம்.ஏ. நுஃமான் ஆகியோரே இம்மாற்றத்தை ஏற்படுத்தினர். இவர்கள் மஹாகவியும் நீலாவணனும் கவனத்துக்குரிய முதல்வரிசைப் படைப்பாளிகள் என இனங்காட்டினர். இவ்வாறு அவர்கள் இருவரும் கவனிப்பும் கணிப்பும் எய்தியமைக்கு அழகியல் தொடர்பன ஐரோப்பிய மார்க்சியவாதிகளின் ‘விமர்சன யதார்த்தம்’ சார்ந்த சிந்தனைகள் தமிழ்ச் சூழலில் அறிமுகமான சூழலே முக்கிய காரணி எனலாம்.

இவ்வாறு அறிமுகமான மார்க்சிய அழகியல் தொடர்பான இப்புதிய சிந்தனைகளை முன்வைத்து 1970 - 80 காலப்பகுதியல் ஈழத்து முற்போக்காளரிடையே விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றின் தொடர்ச்சியாகவே கலாநிதி கா.சிவத்தம்பியவர்கள், 1950-70களில் தாம் முன்வைத்த பார்வைகள் தவறு என்பதைப் பகிரங்கமாக 1980களின் ஈற்றில் இலக்கிய அரங்கு ஒன்றில் ஒப்புக்கொண்டார். தாங்கள் தொடக்கத்தில் சோசலிச யதார்த்தவாதப் பார்வையை முன்வைத்ததாகவும், மாறாக விமர்சன யதார்த்தவாதப் பார்வையை முன்வைத்திருக்கவேண்டும் என்பதுமாக அவருடைய வாக்குமூலம் அமைந்தது. (இலங்கை தெல்லிப்பழையில் கலை இலக்கியக் களம் நிகழ்த்திய சிறுகதை நாள் அரங்கில் நிகழ்த்தப்பட்ட நிறைவுரையில் கலாநிதி கா.சிவத்தம்பியவர்கள் முன்வைத்த ஒப்புதல் வாக்குமூலம் இது. திகதி பற்றிய தகவல் கைவசம் இல்லை.)
கலாநிதி கா. சிவத்தம்பி அவர்களது மேற்படி கூற்றை அவருடைய பெயரைச் சுட்டாமலே பிரேம்ஜி அவர்கள் தமது, ‘முற்போக்கு இலக்கியம் - சித்தாந்த நெருக்கடிகளும் முன்போதலுக்கான வழி மார்க்கங்களும்’ என்ற ‘விபவி’ கருத்தரங்க உரையில் (1996)குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். தாம் சோசலிச யதார்த்த வாதத்தை நடப்பு நிகழ்ச்சி நிரலில் என்றுமே முன்வைத்ததில்லை எனவும் ஜனநாயக யதார்த்தத்தையே தெளிவான பார்வையுடன் முன்வைத்த தாகவும் பிரேம்ஜி அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் (பக்.127-28).
இத்தொடர்பிலே எழும் சில அடிப்படை வினாக்களை பிரேம்ஜி அவர்களுக்கு முன்வைத்து விடைகாண வேண்டியது எமது வரலாற்றுக் கடமையாகிறது.

அ) மேலே சுட்டிய எஸ் பொ., மு. தளையசிங்கம், மஹாகவி, நீலாவணன் முதலிய முக்கிய மனிதநேயப் படைப்பாளிகள் தொடர்பாக, அவர்களுள்ளும் குறிப்பாகப் பின்னைய இருவர் தொடர்பாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எத்தகு கருத்துக் கொண்டிருந்தது? சங்கத்தில் இத்தொடர்பில் விவாதங்கள் நிகழ்ந்ததுண்டா?
ஆ) இ.மு.எ.ச. ஜனநாயக யதார்த்தத்தை முன்வைத்த சூழலில் அதனோடியைந்து செயற்பட்ட கலாநிதிகள் கைலாசபதி மற்றும் சிவத்தம்பி ஆகிய இருவரும் சோசலிச யதார்த்த நோக்கில் விமர்சனம் செய்தார்கள் என்பதை இ.மு.எ.ச. சமகாலத்தில் அறிந்திருந்ததா? இதுபற்றி அவ்வியக்கத்தின் உள்ளே வாதப்பிரதி வாதங்கள் நிகழ்ந்தனவா?

இத் தொடர்பிலே செயலாளர் என்றவகையில் பிரேம்ஜி அவர்கள் மேற்கொண்டிருந்த நிலைப்பாடு எத்தகையது? ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றோட்டத்தை இயக்கி நின்ற அம்சங்களை உரியவாறு இனங்காண்பதற்கான முயற்சிகளின்போது தெளிவுபெற்றுக்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் தொடர்பான வினாக்கள் இவை.

ஈழத்தின் தமிழிலக்கியச் செல்நெறியைத் தீர்மானிப்பதில் கடந்த அரைநூற்றாண்டுக் காலத்தில் முனைப்புடன் செயற்பட்டு நின்ற முதுபெரும் இலக்கியவாதியான திரு.பிரேம்ஜி அவர்கள்; மேற்படி வினாக்களை முன்னிறுத்தித் தமது இலக்கிய வாழ்வின் நினைவுகளைப் தொடர்ந்து பதிவு செய்வார் என இலக்கிய உலகம் எதிர்பார்த்து நிற்கிறது.

(27- 09- 2009 அன்று கனடா,டொரண்டோ ‘ஸ்காபரோ விலேஜ் ரிக்ரியே‘ன்சென்ரர்’அரங்கில் நடைபெற்ற ‘பிரேம்ஜி கட்டுரைகள்’ நூலின் அறிமுக நிகழ்வில் ஆற்றிய ஆய்வுரையில் முன்வைத்த கருத்துகளின் அடிப்படையில் ‘காலம்’ இதழுக்காகப் புதிதாக எழுதப்பட்ட கட்டுரை.)