இரக்கமற்ற இரவுகளின் வலி - மு.புஷ்பராஜன்

உலகம் பூராவிலுமுள்ள அரசுகளும், அரசை நோக்கிய போராட்டங்களை நடத்தும் இயக்கங்களும் தமது கருத்துகளுக்கான மாற்றுக்கருத்துக்கள் உருவாகுவதை ஏனோவிரும்புவதில்லை. அவர்கள் தாம் ஒரு பரந்த தளத்தில் திறந்த மனத்துடன் இயங்குவதாகச் சொல்லிக்கொள்வார்கள். தமது ஊடகங்களில் தமது ஆட்சியைத் தக்கவைப்பதற்கான ஒரு தந்திரமாகவும் அவற்றை மேற்கொள்வார்கள். நடை முறையில் தமக்கு எதிரான கருத்துகளை முன்னெடுப்பவர்களின் இருப்பை அவர்கள் விரும்புவதில்லை. தமக்கான நலன்களின் தடைகளை அகற்றுதல் என்ற பெயரில் அவர்கள் மேற்கொள்ளும் கைதுகள், விசாரணைகள், தண்டனைகள் என்பவைகள் மிகப் பயங்கரமானவையாக இருக்கும். இவர்களின் விசாரணை என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுபவர்களது மனநிலைகள் என்றுமே அவர்களால் உணரப்படுவதில்லை அதன்மூலம் சிதைக்கப்படும் உறவுகளின் துயர்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவையே.

ஈராக்கிலுள்ள அமெரிக்க, பிரிட்டன் கூட்டுப்படைகள், ஈராக்கியக் கைதிகளை எவ்வாறு சித்திரவதை செய்கின்றார்கள் என்பதற்கு ஆதாரமாகவுள்ள சில புகைப்படங்களைத் தொலைக்காட்சிகளும்

பத்திரிகைகளும் முன்பு வெளியிட்டன. அவைகளில் நிர்வாணமாக்கப்பட்ட கைதிகள், பிரமிட் அமைப்பில் குவியலாக அடுக்கப்பட்டுள்ளார்கள் அல்லது கொட்டப்பட்டுள்ளார்கள். அருகில் இரு இராணுவத்தினர் (ஆணும்,பெண்ணும்) பெருமை பொங்கச் சிரித்தபடி போட்டோவிற்குப் ‘போஸ்’ கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

வேட்டையாடப்பட்ட விலங்கின் மேல்காலையும், துப்பாக்கியையும் ஊன்றியபடி போஸ் கொடுப்பவர்களை அது உங்களுக்கு நினைவூட்டலாம். நிர்வாணமாக நிறுத்தப்பட்டுள்ள கைதிகளின் ஆணுறுப்பைச் சுட்டிக்காட்டியபடி நிற்கிறாள் ஒரு பெண் இராணுவத்தினள். இது தான் வெற்றிகொள்ளப்பட்ட பரிசுப் பொருளைப் பெருமையுடன் சுட்டிக்காட்டுவதுபோல் இருக்கிறது. இதே

இராணுவத்தினள் இன்னொரு கைதியை, நாயைக் கட்டி இழுப்பது போன்று ஒரு போட்டோ. இன்னும் இவைபோன்று சாக்கினால் முகம் மறைக்கப்பட்ட கைதிமேல் சிறுநீர்கழித்தல், பிறப்பு உறுப்பு

களில் துப்பாக்கியின் அடிப்பாகத்தால் அடித்தல், துப்பாக்கி முனையை வாய்க்குள் திணித்தல், பூட்ஸ் கால்களால் கைதியின் முகத்தை மிதித்தல், நாய்களை அவர்கள்மீது ஏவிவிடுதல், பிறப்பு உறுப்பு

களிலிருந்து இரத்தம் வழியக் குற்றுயிராயிருப்பவர்களைக் கொன்றுவிட்டு, பின் அடையாளம் காணமுடியாதபடி முகத்தைச் சிதைத்து எங்காவது வீசிவிடுதல் என இவ்வதைகள் எல்லா வதைமுகாம்களிலும் தொடர்கின்றன.

இவ்வகையான சித்திரவதைகள் வெளி வரும்போது, இப்பொழுதுதான் இவைகள் மேற்கில் நிகழ்வதுபோலவும், இது அதிர்ச்சி அளிப்பதாகவும், அமெரிக்க, பிரிட்டன் அதிபர்களும், அவர்களின் இராணுவக் குரல்தரவல்லோர்களும் தொடர்ந்தும் தொலைக்காட்சியில் கூறிக்கொண்டிருப்பார்கள். இவர்கள் அடிக்கடி கூறுவதெல்லாம் அதிர்ச்சியடைந்ததும், வெறுப்படைந்ததும்தான். இதை அவர்

கள் ஒப்புக்குச் சொல்வதுதான். அத்தோடு மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் இவை ஒருசில தீயவர்களின் செயற்பாடுகள்தான் என்றும், ஏனையவர்கள் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்திற்கு அமைவாகவே நடந்துகொள்கிறார்கள் என்றும் கூறித் தம் சட்டைப் பையினுள் இருக்கும் ஜேனிவா சட்ட விதிகளை எடுத்து ஊதிவிடுவார்கள். நாம் அசந்துபோய் நிற்கவேண்டியதுதான். இக்கனவான்கள் அதிர்ச்சி அடைவதும், வெறுப்படைவதும், தமது மனப் பிறழ்வு பட்ட இராணுவத்தின் வக்கிரங்களுக்குப் பலியாகிப்போன கைதிகளின் மனம், உடல்கள் பற்றியதல்ல. மாறாக வெளியே தெரியவந்துள்ள தமது அநாகரிக நடவடிக்கைகள் பற்றியதாகவே இருக்கிறது. நாகரிகசமூகம், ஒடுக்கப்பட்டவர்களின் விடு

தலையாளர்கள் எனத் தமக்குத்தாமே முடிசூடிக்கொண்ட வார்த்தைகள், மிகக்குறைவான ஆயுளைத் தன்னளவில் கொண்டுவிட்டதேயென்ற ஆதங்கமேதான். வெளியிடப்பட்டுள்ள உண்மைத்

தன்மைபற்றிய மயிர் பிளக்கும் ஆராய்ச்சியும் உடனே மேற்கொள்வார்கள். நிகழ்வுகளின் மன அதிர்வுகளை வெளிக்காட்டுமுன், கமெரா முன் சிரிப்பதா அன்றி அழுவதாவென முன்கூட்டியே தீர்

மானித்துக் கொள்ளும் அரசியல்வாதிகளின் மனேபாவங்களை அறிந்தவர்கள் இவர்களை ஒருநாளும் நம்பப்போவதில்லை.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட படைவீரர்கள் சார்பாகச் சொல்லப்பட்டதாவது; விசாரணைக்கென ‘பென்ரகனால்’ ஒப்பந்தஅடிப்படையில் அமர்த்தப்பட்ட விசாரணையாளர்களது கட்டளைக்கு அமைவாகவே தாம் நடந்துகொண்டதாகக் கூறுகிறார்கள். இது குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லோரும் இறுதியில் கூறும் தயாரிக்கப்பட்ட வார்த்தைதான். இச்சித்திரவதைகள் பற்றி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமைக் குழுக்கள் ஆகியவைகள் ‘ஈராக்கிலுள்ள அமெரிக்க கவர்னர் போல் பிறிமருக்கு நவம்பர் 2003ல் எடுத்துக் கூறியதாகவும்’ கூறுகிறார்கள். அப்போது அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. இப்பொழுதுதான் சுடுகுது மடியைப்பிடியென ஓடித்திரிகிறார்கள்.

இச்சித்திரவதைகளும் விசாரணைகளும் சதாம் உசேனின் ஆட்சியில் சித்திரவதைகளுக்குப் பெயர்பெற்ற ‘அபுகறேய்ப்’ (Abu Ghraib) சிறைச்சாலையில்தான் நடைபெற்றது ஒரு முக்கிய வரலாற்று முரண் நகையல்லவா? ஜெனிவா, மனித உரிமைகள், சர்வதேச விசாரணைகள் என அதிகம்பேசும் மேற்கு நாடுகள், தங்கள் விடயம்சார்ந்து எவ் வாறு நடந்துகொள்கிறார்கள் என்பது அறிந்த விடயம்தான். ஆனால் அவர்கள் அவற்றை மறந்ததான பாவனையில், உலகமும் மறந்துவிட்டது எனக் கருதிய மாதிரி அறிக்கைகள் விடுவதற்கு மட்டும் என்றுமே தயங்கியதில்லை.

இவ்வகைச் சித்திரவதைகள் இப்பொழுது தான் அமெரிக்க, பிரிட்டன் கூட்டுப்படைகளினால் நிகழ்ந்ததாகக் காட்டமுனைவதுதான் மிக வேடிக்கையானது. இத்தகைய சக்திகளின் ஆவலையும் மீறி,

பொதுவாகவே விடுதலைப் போராட்டங்கள் நடைபெறும் நாடுகளிலும், நாடுகளை, நாடுகள் ஆக்கிரமித்துக்கொள்ளும்போதும் வதைமுகாம்கள், சித்திரவதைகளென, உலகின் எல்லா இடங்களிலும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

இதற்கு விதிவிலக்கு இல்லையென்பதுதான் அதன் துயர்தரும் யதார்த்தம். அமெரிக்கா வியட்நாம்மீதும், பிரிட்டன்வட அயர்லாந்தின்மீதும், பிரான்ஸ் அல்ஜீரியா மீதும், இஸ்ரேல் பலஸ்தீனத்தின்மீதும், இரசியா ஆப்பானிஸ்தானிலும் பின் செர்ச்சினியாமீதும், இந்தியா காஸ்மீர் மீதும் சிறிலங்காவும் இந்தியாவும், தமிழீழத்திலும், இன்னும் இன்னும் அநேக அரச இராணுவங்கள், தங்கள் கிளர்ச்சிக்காரர் பகுதிக்குள்ளும், அதேவேளை புரட்சி இயக்கங்களும் தாயக மீட்பிற்காக போராடுபவர்களும் தங்களிடமுள்ள கைதிகள்மீதும் என்று இவை முடிவற்றுச் செல்கின்றன.

அமெரிக்கா எப்படித்தான் தன்னை உலகின் காவல் சன்மனசாக காட்டிக் கொண்டாலும் அதன் கொடூரமுகம் அவ்வப் போது வெளிவந்தபடியே தானுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான தனது புகழ்

பூத்த நடவடிக்கைகளில் ஒன்றாக, சந்தேகப்படுபவர்களை அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும், அவர்கள் அந்த நாடுகளில் இரகசியமான முறையில் கைதுசெய்யப்படுகிறார்கள். பின்பு இரகசிய விமானங்கள்மூலம், சர்வதேசகாரியாக அங்கீகரிக்கப்பட்ட குடிஅகல்வு, குடிவரவுச் சட்டங்களுக்கு விரோதமாகக் கடத்தப்பட்டு, ஐரோப்பிய நாடுகளில் இரசியமாக அமைக்கப்பட்ட விசாரணை நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள். இங்கு விசாரணை என்ற பெயரில் சித்திரவதைகளை சி.ஐ.ஏ. மேற்கொண்டுவருவதாக செய்திகள் வெளி வந்தன.

முன்னாள் அமெரிக்க அரச செயலர் கொண்டலிசாறைசின் ஐரோப்பிய பயணத்தின்போது, ஜேர்மனியில் இந்த விவகாரம் மெல்லப் புகைந்தது. பின்னர், ஆதாரங்களுடன் அவை வெளிப்படுத்தப்பட்டது. இவ்வகைச் சட்டவிரோத ஆள்கடத்தலுக்கு உதவியாக, பதினான்கு ஐரோப்பிய அரசுகள், சி.ஐ.ஏ.யுடன் தொடர்புபட்டிருப்பதாகவும், சில நாடுகள் இவைகளை அறிந்தும் அறியவிரும்பாத வகையில் இயங்குவதாகவும், சில நாடுகள் இவர்களுக்கு வேண்டிய இரகசியத் தகவல்களை வழங்குவதாகவும் சொல்லப்பட்டது. இவ்வகை வதைமுகாம்கள் இயங்கும் நாடுகளாக போலாந்தும், ஜேர்மனியும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னர் இதேவிதமாக சட்டவிரோத ஆள் கடத்தலில் இஸ்ரவேல் இயங்கி வந்ததை யாவரும் அறிவர். இந்த வகைச் சட்டவிரோத ஆள்கடத்தலில் புதிதாக இணைந்துகொண்டு, தன்கோர முகத்தை வெளிக்காட்டியநாடு ஸ்ரீலங்காவாகும். இவ்வாண்டு (2009)ஓகஸ்ட் மாத முற்பகுதியில் விடுதலைப் புலிகளின் சர்வதேச நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த செல்வராசா பத்மநாதன், மலேசியாவிலுள்ள ‘ரியூன்’ஹொட்டலில் வைத்து, ஸ்ரீலங்கா அரசால் கடத்தப்பட்டார். அமெரிக்காவும் சி.ஐ.ஏ.க்கு உதவி யாக இணைந்துகொண்ட நாடுகளும் இந்த சட்டவிரோத நடவடிக்தை பற்றிய குற்றவுணர்வோ, வெட்கவுணர்வே எதுவாக இருந்தபோதும் மிக அடங்கிய குரலில் அபிப்பிராயங்களைக் கூறிக்கொண்டார்கள். ஆனால் ஸ்ரீலங்காவோ மிகவும் அட்ட

காசமான வெற்றிப் பெருமையாக இதைக் கொண்டாடுகிறது. இந்தச் சட்டவிரோத ஆட்கடத்தலுக்குப் பின்னணியாயிருந்த ரொகான் குணரத்தினா இவ்வாறான ஆட்கடத்தல்களை முன்னர் அமெரிக்காவும், இஸ்ரவேலும் செயற்படுத்திக்கொண்டன என்று கூறித் தம்மை நியாயப்படுத்த வருகிறார். இதுபற்றி சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய விவகாரங்களின் பொறுப்பாளர் சாம்சாவ்றி ‘இத்தகைய சூழ்நிலையில் ஒருவரைத் திருப்பி அனுப்புவதென்பது சட்ட விரோதமானதும், சர்வதேசச் சட்டங்களை மீறியதுமாகும். ஒருவருக்கெதிராகக் குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரும் பொழுது அல்லது வேறுவிதத்தில் நடவடிக்கை எடுப்பதாகவிருந்தால், அவற்றைச் சட்டத்திற்கு அமைவாகப் பின்பற்றவேண்டும் என்பதைச் ஸ்ரீலங்கா அரசு உணர்ந்துகொள்ளவேண்டும்’ என்கிறார். ஆனால் இவ்வகை கடத்தல்கள் தொடருமெனச் ஸ்ரீலங்கா மார்தட்டிக்கொள்கிறது.

இச்சித்திரவதைகள் அரச இயந்திரத்தின் ஒடுக்குமுறையின் அலகு என்பவற்றோடு, அதை நிகழ்த்துபவர்களின் மனங்களில் விளைந்துள்ள அதிகார மமதையின் வெளிப்பாடும்தான். அந்த மமதையின் முன்னால் அகப்பட்டவர்கள் அனைவரும் ஒரு பூச்சி என்ற மனநிலைதான். இந்தச் சித்திரவதைகளின் தொடக்கமாக பெரிய வியாழனைக்கொண்டால், இன்றுவரையிலும் அது முடிவின்றித் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த அதிகார மனநிலைபற்றி பிரிட்டன் முக்கிய நாடக ஆசிரியரும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவருமான ஹரால்ட் பின்ரர் தனது நாடகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

‘இதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய். இது என்னுடைய விரல். இது என்னுடைய சின்ன விரல். இது என்னுடைய பெரிய விரல். அத்துடன் இது என்னுடைய சின்ன விரல். உன் கண்முன்னால் எனது பெரிய விரலை இவ்வாறு ஆட்டுகிறேன். இதேபோல் இப்போது எனது சின்ன விரலை ஆட்டுகின்றேன். ஒரே நேரத்தில் எனது இரண்டு விரல்களையும் ஆட்டமுடியும். இவ்வாறு. நான் விரும்பும் எதையும் என்னால் நிச்சயமாகச் செய்ய முடியும்.’ ஆம், அவர்கள் விரும்பியபடி விரலை ஆட்டலாம், மடிக்கலாம் எதையும் செய்யலாம்தான். அதிகாரம் அவர்கள் பக்கம் தானே! இதேபோன்று ஈராக்கிய சித்திரவதைகளைச் செயற்படுத்தியவர்களாகக் கூறப்படும் படைவீரன் ஒருவன் இவ்வாறு கூறுகிறான்.

‘நீ துப்பாக்கி வைத்துள்ளாய். நீதான் சட்டம். நீ மக்களை எந்த விதமாக ஆக்கிக்கொள்ள விரும்புகின்றாயோ அந்த விதமாக ஆக்கிக்கொள்ளலாம்.’ இவ்வதைமுகாம்களில் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களது உறவினர்கள், அவர்களது துயரங்கள் கவனத்தில் கொள்ளப்படுவதேயில்லை. ஆனால் இச்சித்திரவதைகளை நிகழ்த்துபவர்களும் குடும்பம், மனைவி, மக்கள் என்று கூடிவாழ்பவர்களாயிருப்பதுதான் இதன் மிகப் பெரும் துயரம். அதிகாரிகள் முன்னால் ஒருவன் நிர்வாணமாக்கப்படும்போது, அவன் மனித மகத்துவத்தை, மானுட கௌரவத்தை இழக்கவைக்கப்படுகிறான் என்பதை உணராமல் மமதையுடன் அதைக் கேலியாக மகிழ்ந்துகொள்கிறார்கள். எத்தனை தாய்மார்கள் தங்களின் கணவன்மார்கள், மகன்கள், உறவினர்கள் என்று அவர்களின் புகைப்படங்களுடன் தடுப்பு முகாம்களின் முன்னால் அலைகிறார்கள். காத்துக்கிடக்கின்றார்கள். முள்ளிவாக்காலின் வீழ்ச்சிக்குப் பின்னர் சிறிலங்காவின் தடுப்பு முகாம்களில் தம் உறவுகளைத் தேடி எத்தனைபோர் அலைகிறார்கள். 17 மாதங்கள் லெனின்கிறாட் சிறைமுன்னால் கணவனை இழந்த பின், தன்மகனுக்காக அன்னா அக்மத்தோவா அலைந்தாளே ‘மகன் கம்பிகளிடையே கணவன் புதைகுழியினுள் மன்றாடு மன்றாடு.’. அவள் படைப்பாளியாக இருந்தபடியினால் அவளால் தன் மனத்துயரைப் பாடவாவது முடிந்தது. பாடவும் முடியாமல், துயரை வெளிப்படுத்தவும் முடியாமல் நெஞ்சிலடித்து குமுறும் தாய்மார்கள் எத்தனை பேர்கள். ‘நீ யாரைத் தேடுகின்றாய்.’

‘ஒருவரையும் இல்லை. கடந்த மூன்று வருடங்களாக என் கணவரைத் தேடிக் கொண்டிருக்கிறேன். இப்போது அவர் சமாதானத்தில் இளைப்பாறுகிறார் என அறிகிறேன்’. ‘பிறகு ஏன் வந்தாய்.’

‘சிநேகிதிக்கு உதவ’ இன்னொரு பெண்ணைச் சுட்டிக்காட்டினாள். ஆம் அவள் தன் கணவனைத் தேடிக்கொண்டிருக்கிறாள். சிறையிலிருந்தபடி ஒரு பல்கேரியக் கவிஞன் தன் ஆவலை கவிதைமூலம் மனைவிக்குத் தெரிவிக்கின்றான்.
‘உனது தூக்கத்தில் உன்னைப் பார்ப்பதற்காய்

எதிர்பாராத விதமாய் வரும்
தொலை தூரத்துவிருந்தாளி போல் சில
நேரம் வருவேன். என் ஆவலிற்கு எதிராக
கதவைத் தாழிட்டு வெளித் தெருவில்
நிற்க விட்டுவிடாதே. மெதுவாய் உள்
நுழைவேன். அமைதியாய் உட்காருவேன் .
உன்னைப் பார்ப்பதற்காய் இருளை ஊடறுக்கும்
எனது பார்வை இறுதியில் திருப்தியடைகையில் முத்தமிடுவேன்
உன்னை விட்டு விலகுவேன்.’

இதேபோன்று தனது மனைவி, மக்கள், பெற்றோருடன் மீண்டும் வாழ ஆசைகொண்ட குவான்டனமா சிறைக்கைதி ஒருவரின் குரல் ‘எனது குரல் கோட்கிறதா ஓ! நீதிபதியே எனது எல்லா விருப்பங்களும் கேட்கிறதா நாங்கள் குற்றமற்றவர்கள் எந்தக் குற்றமும் செய்யாதவர்கள் நீதியும் கருணையும் இந்த உலகில் மிச்சமிருந்தால் என்னை விடுதலை செய். எங்களை விடுதலைசெய்.’

இருளிலிருந்து நெறுங்குண்ட இதயத்துடன் வெளிவரும் இந்த சோகம் அதிகாரத்தின் காதுகளில் கேட்குமா? இவ்வகைத் துயரங்களின் வலி உணரப்படவேண்டும். காலம்கடந்து உணரப்பட்டகுரலொன்று சமீபத்தில் கேட்டது. பொல்பொட்டின் ஆட்சியில் Tuol Sleng சிறையில் சித்திரவதைகளுக்குப் பொறுப்பாக இருந்த தோழர் ‘டச’ என அழைக்கப்பட்ட Kaing Guek Eav என்பவன் நிகழ்த்திய படுகொலைகள் பற்றிய விசாரணையில், பகிரங்கமாக தனது குற்றங் களை அவன் ஒப்புக்கொண்டான். ‘சித்திரவதைகள் மூலம் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டவர்கள் குற்றமற்றவர்கள். குற்றம்சாட்டப்பட்டது போல் அவர்கள் குற்றம் புரிந்தவர்கள் என நான் நம்பவில்லை,’ எனக் கூறியதோடு பாதிக்கப்பட்டவர்களது உறவினர்களிடன் ‘என்பாவமே என்பாவமே என் பெரும்பாவமே’ என்ற விதமாக மன்னிப்பும் கேட்டுக்கொண்டான். ஆனால் அவனை மன்னிக்க அந்த உறவினர்கள் யாரும் தயாராக இருக்கவில்லை. அவனது கண்ணீரைப் போலியானது என்கிறார்கள் அவர்கள். இவ்வாறுதான் ஸ்ராலின்கால கைதிகள் பின்னர் குற்றமற்றவர்களாக அறிவிக்கப்பட்டார்கள். காலம் கடந்து பெற்ற ஞானம் மனிதாபிமான அடிப்படையில் உடன் உணரப்பட்டிருந்தால் உருக்குலைந்த உடல்கள் எழுப்பிய வேதனைக் குரல்களை, இந்த புவிப்பரப்பில் காற்றுசோகத்துடன் எடுத்துச் சென்றிருக்காது. விசாரணை, விசாரணைக் கொமிசன்களுக்கு அப்பால் அநியாயமாக பறிக்கப்பட்ட உயிர்கள் பற்றியும் அந்த உயிர்களின் உறவுகளின் வலி பற்றியும் உணரப் படுதல் என்பதே முக்கியமானது. விசாரணை கொமிசன்கள் அந்த நேரத்தைய பதற்றமான சூழலைத் தணிக்கவும், அரசியல் ஆதாயங்களுக்கும் உதவுமே தவிர, பிரச்சனையின் வேரைத் தொடப்போவதில்லை. ஸ்ரீலங்கா அரசு தமிழர்கள்மீது தொடர்ச்சியாக நடத்திவரும் படுகொலைகளை விசாரிக்க எத்தனை விசாரணைக் கொமிசன்களை ஏற்படுத்தியது. என்ன முடிவு ஏற்பட்டது? தண்டனை என்ற பெயரில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை அவர்கள் சொந்த இடங்களுக்கே இடமாற்றலாக்கிய கேலிக்கூத்துத்தான் நடைபெற்றது. அபுக்றாப்பின் சித்திரவதைகள் இன்று மேலைத்தேய பத்திரிகைகளின் புண்ணியத்தால் பெரிய அளவில் வெளிச்சப்படுத்தப்பட்டு, பலத்த விமர்சனங்களுக்கும் உள்ளாகியது. ஆனால் வெளிச்சத்திற்கு வராத படுகொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அத்தோடு கண்டுபிடிக்கப்படாத புதைகுழிகள் அதிகரித்துக்கொண்டும்தான் இருக்கின்றன. முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் 50,000 மேற்பட்டமக்கள் உயிரோடும் இறந்தும் புதைக்கப்பட்ட கொடூரத்தின்மேல் மனச்சாட்சியை மீறிய அரசியல் இலாப இருள் மண்டிக் கிடக்கிறது. இவற்றிற்கான மீட்சி உண்மையான நீதியின்மேல் நடைபெற வேண்டுமே தவிர, அரசியல் ஆதாயங்களின் அடிப்படையிலல்ல. அவ்வாறு நடைபெறுமா?

ஆளும் ஆசையும், ஆதிகார மமதையும் பிறரைத் துச்சமாக மதிக்கையில், மெலிந்த மனங்களின் துயரங்களின் வலி முடிவற்றுத் தொடர்ந்துகொண்டுதானிருக்கும்.