இனியும் தருவதற்கு என்ன இருக்கிறதென்று
இதயத்தை உள்ளும் புறமுமாய்
திறந்து காட்டுகிறாய்
நான் எதையும் கேட்கவில்லை
கொடுப்பதைப் பெற்றுக்கொள்ளச் சொல்லித்தான்
மன்றாடுகிறேன்
தருவதை விடவும் கடியது
பெறுவதுதான்
தாங்க முடியா பெருவலியிலிருந்து
என்னை விடுவித்துவிடு எனக்
கதறும் என்னிடம்
யாரோ வரைந்துவைத்த கோட்டுக்கு அப்புறமிருந்து
சொல்கிறாய்
‘ மிச்சம் மீதி எதுவும் இல்லை ‘
நான் எதையும் கேட்கவில்லை
எடுத்துக் கொள் என்றுதான் இறைஞ்சுகிறேன்
என் காலத்தை எடுத்துக்கொள்
கனவுகளை எடுத்துக்கொள்
கண்ணீரை எடுத்துக்கொள்
குருதி கசியுமென் இதயத்தை எடுத்துக்கொள்
ரத்தத்தில் பிறந்து அதையே தின்று
பெருகும் புற்று நோய் போல
என்னுள் நொடிதோறும் கிளைத்துப் பரவுகிறது
நேசம்
அதன் பாரம் என்னை அழுத்துகிறது
அதை நீ எடுத்துக்கொள்
இவை எதையும் நீ எடுத்துக்கொள்ள
முடியாதுபோனால்
என் அன்பே !
குறைந்தபட்சம்
உயிரையாவது எடுத்துக்கொள்
2.
மழை கழுவிய சாலையில்
படர்கிறது
தெருவிளக்கின் மஞ்சள்
காற்றைத் தடுத்து மறிக்கும்
கண்ணாடிக்கு இப்புறமிருந்து
பார்த்துக் கொண்டிருக்கிறோம்
தனிமையின் ஆவேசத்தில்
மொழிக்குள் நாம் எளிதாய்க்
கடந்த எல்லைகள்
இறுக்குகின்றன குரல்வளைகளை
கலையாத படுக்கை விரிப்பில்
சென்று பதுங்குகிறது
குளிர்
தீண்ட நெருங்கிய விரலும்
திறந்திருக்கும் சருமமும்
பற்றியெரிய
புகையாய்க் கவிகிறது
தயக்கம்
விடியத் துவங்குகையில்
விழியின் நுனியில் துளிர்க்கும் துளியில்
கரையத் தொடங்குகிறது
அச்சம்
3.
நினைவிருக்கிறதா
பாரதியின் கதியை நினைவுகூர்ந்தபடி
யானையைக் கடந்து
பார்த்தசாரதியைப் பார்க்கப் போயிருந்தோமே?
ஆச்சாரம் போர்த்திய முதியவர்களின்
தோல் சுருக்கங்களை ரசித்தவாறு
வரிசையில் நின்று
பேச்சின் இடையே
மந்திரமும் சொன்னவர்
உடைத்துத் தந்த தேங்காயைப்
படியில் அமர்ந்து பகிர்ந்து தின்றோமே
நினைவிருக்கிறதா ?
அப்போது
பார்த்தசாரதியின் மீசையை
வியந்தபடி என்
கண்களைப் பார்த்தாய்
அவற்றுள்
குழந்தை ஒன்று தவழ்வதைப் பார்த்தாய்
அதற்கும் மீசை இருந்ததைப் பார்த்தாய்
திகைப்பு அடங்குவதற்குள்
அது உன்
உந்திச் சுழி வழியே
உள்ளே புகுவதையும் பார்த்தாய்
நினைவிருக்கிறதா?
4.
உணவகங்கள் பேசுவதற்கானவை அல்ல
அதிலும் அசைவ உணவகங்கள்
அலைக்கழிக்கின்றன நம் புலன்களை
காதல் மொழி பேச விரும்பும் நாவில்
எச்சிலை சுரக்கச் செய்கிறது
கறி மீன்
உன் கூந்தலை கோத
விழையும் விரல்களை ஈர்க்கிறது
முள்கரண்டி
அப்பத்தின் புளிப்பு
போதை ஏற்ற
அருகில் அமர்ந்திருக்கும் உன்னைப் பார்க்கிறேன்
வறுத்த கறித் துண்டங்களாய்
காட்சிதரும் உதடுகளை எடுத்து
உண்ணத் தொடங்குகிறேன்
5.
காத்திருக்கும்போது
பசி தெரிவதில்லை
நடிகையின் மார்பு
அதை ஏந்தியிருக்கும் சுவரொட்டி
சுவரொட்டியை நாவால் நனைத்து
உரித்தெடுக்கும் மாடு
வாலின் விரட்டலுக்கு அஞ்சாமல்
அதன் மேல் அமர்ந்திருக்கும் ஈ
அது கடிப்பதால் சிலிர்க்கும் முதுகு
எல்லாம் தெரியும்
பசி தெரியாது
காத்திருக்கும்போது
அலுவலக வாசலில் நிற்கும் மரம்
அதிலிருந்து விழும் இலைகள்
இலைகளின் வேறுபட்ட நிறங்கள்
நிறங்களின் சிதறலுக்குக் கீழே தெரியும்
மணல்
அதில் ஊரும் எறும்பு
எல்லாம் தெரியும்
பசி தெரியாது
உனக்காகக் காத்திருக்கும்போது
சற்றே பிய்ந்து போன காலணியை
இழுத்தபடி நடந்துவர
கட்டைவிரலில் நறுக்காமல் நீண்டிருக்கும் நகம்
அதன் நுனியில் படிந்திருக்கும் புழுதி
புழுதிக்கு வந்த வாழ்வு
எல்லாம் தெரியும்
பசிதான் தெரியாது