சில மாதங்களுக்கு முன்னர் திரு. பாலமனோகரன் எழுதி வெளியிட்ட ‘இரத்தம் சிந்தும் இதயங்கள்’ அல்லது ‘Bleeding Hearts’ என்னும் நாவலைப்பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறுமாறு திரு. முரளி கேட்டிருந்தார். ஈழத்து இலக்கிய வரலாற்றிலே மைல் கல்லாக, திருப்புமுனையாக அமைந்த ‘நிலக்கிளி’ என்னும் நாவலின் ஆசிரியருடைய ஆங்கிலப்படைப்பை பற்றி பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்த முரளிக்கு நன்றியைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். பாலமனோகரனின் திறமையைப் பற்றி அவருடைய எழுத்துமூலமாக அறியும் வாய்ப்பு ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்த பொழுதிலும் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு மேமாதம் நடந்த தமிழியல் மகாநாட்டிலேயே கிடைத்தது. அவருடைய Bleeding Hearts என்ற நாவலைப் பூரணமாகத் திறனாய்வு செய்வதற்கு வேண்டிய அனுபவ ஆழமோ, பின்னணியோ என்னிடம் இல்லை என்றே கூறவேண்டும். இருந்தாலும் மனதில் பட்ட சில எண்ணங்களை இந்த வெளியீட்டு விழாவிலே முன்வைக்க விரும்புகின்றேன்.
Bleeding Hearts என்னும் நாவலின் ஆசிரியர் நிலக்கிளி பாலமனோகரன் என்று முன் அட்டை கூறுகின்றது. இவ்வாறு கூறும் போதே இந்த இரண்டு நாவல்களுக்கும் இடையில் ஒரு தொடர்பு உள்ளது, ஆங்கிலத்தில் intertextual connection என்று சொல்வார்கள் – அது ஏற்படுகின்றது. முதல் நாவலுடைய செல்வாக்கும், பாதிப்பும் இரண்டாவது நாவலில் ஏற்படுகின்றது என்பதற்கு அறிகுறியாக இது அமைகின்றது. நாவலைப் படிக்கும் பொழுது இந்த இணைப்பு மேலும் பலமடைகின்றது. அதேசமயத்தில் சில முக்கியமான வேறுபாடுகளையும் நாங்கள் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
ஒப்பியல் நோக்கை வாசகர்கள் என்ற முறையில் ஊக்குவிக்கும் வகையில் இந்த நாவல்கள் அமைந்துள்ளன. முக்கியமாக எங்களுடைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், இரண்டு மொழிகளோடு வளர்ந்தவர்கள் இந்த ஆங்கில நாவலை வாசிக்கும் போது ஆங்காங்கே நிலக்கிளியை ஞாபகப்படுத்திக் கொள்வது தவிர்க்க முடியாத விடயமாகும். புலம்பெயர்ந்த நாட்டில் பிறந்த இளம் தலைமுறையினர், தமிழ் தொடர்பு இல்லாத ஆங்கில வாசகர்கள் இந்த நூலை வேறு முறையில் அணுகலாம். இத்தகைய வேறுபாடுகளில் முரண்பாடு இல்லை என்றே கூறவேண்டும். பன்முகப்பட்ட வரவேற்பினாலேயே இலக்கியமும், திறனாய்வும் வளர்கின்றன.
இந்த இரண்டு நாவல்களுக்கும் பாலமாக அமைகின்ற உருவகம் அல்லது Literary hope
கிராமம். அதாவது கிராமத்தை மையமாகக் கொண்ட நாவல்கள் என்ற ஒருமைப்பாடு இவையிரண்டினையும் இணைக்கின்றன. இந்தக் கிராமம் என்னும் கோட்பாடு அண்மைக் கால வரலாற்றிலே முக்கியத்துவம் வாய்ந்தது. எங்களுக்குக் கிராமங்களோடு உள்ள தொடர்பால் நாங்கள் இந்தப் பின்னணியைப் பற்றி பெரிதாய் சிந்திப்பதில்லை. யதார்த்தம் என்னும் பொதுவான கோட்பாட்டை இலக்கி எதிர்பார்க்கும் நாங்கள் வாசகர் என்ற முறையில் கிராமத்தைப் பின்னணியாகவே கருதுவது வழக்கம். மனிதர் ஏதோ இடத்தில் வாழத் தானே வேண்டும் என்ற பொதுவான வரைவிலக்கணத்தில் கிராமம் என்றால் என்ன என்று ஆராய்வதில்லை. ஆனால் வரலாற்று ரீதியாக, முக்கியமாக காலனித்துவ ரீதியாக நோக்கும் போது கிராமத்திற்கும், நகரத்திற்கும் இடையில், குறிப்பிடத்தக்க கருத்தியல் வேறுபாடு உள்ளது. 100 வருடங்களுக்கு முன்னர் மகாத்மா காந்தி, தென் ஆப்பிரிக்க வாழ்க்கையின் பின்னர் Hind Swaraj என்ற நூலை எழுதினார். இந்த வருடம் உலகமெங்கும் அந்த நூலினுடைய முக்கியத்துவத்தை எங்கும் பாராட்டி விழாக்கள் நடைபெறுகின்றன. Hind Swaraj இந்தியாவின் விடுதலையை மனதில் வைத்து எழுதப்பட்ட நூல். இதன் அடித்தளமாக அமைவது கிராமம். பிரித்தானிய ஆட்சி நகரத்தை தன்னுடைய சமூக, பொருளாதார அமைப்பிற்கு ஆணிவேராக அமைத்ததோ, அதே போன்று காந்தி விடுதலையின் சின்னமாக கிராமத்தை அமைத்துக் கொண்டார். காந்தியின் கற்பனையில் உருவான கிராமத்திற்கும், அன்று இந்தியாவில் காணப்பட்ட கிராமங்களுக்கும் இடையில் உள்ள தொடர்பு என்ன என்பது ஆராயப்பட வேண்டிய விடயம். சுயஆட்சிக்கும் கிராமத்திற்கும் முடிச்சுப் போடும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டது. அதாவது இந்தியாவிற்கே உரிய மூலமான அமைப்பு கிராமம் என்பது அந்த நூலின் அடிப்படையான சிந்தனை. பிரித்தானிய ஆட்சி இலங்கையில் வேரூன்றியிருந்த போது Leonard Woolf என்னும் ஆங்கில நீதிபதி கூடஞு The Village in the Jungle என்னும் நாவலை 1915இல் எழுதினார். இங்கு ஒரு வெளிநாட்டு ஆசிரியர் கிராமத்தைப் பற்றி ஆழமான அறிவோடும் உணர்ச்சிபூர்வமான பிணைப்போடும் எழுதுவதைக் காணலாம். எவ்வளவு நுட்பமாக இந்த நாவல் எழுதப் பட்டாலும் இறுதியில் கிராமம் அழிந்து போகின்றது. கிராமத்தில் வாழும் மக்கள் நகரத் திற்கும், சூழ்ந்து நிற்கும் காட்டிற்கும் பலியாகி விடுகின்றார்கள். காலனித்துவ ஆசிரியரின் கற்பனையில் baddegama என்னும் கிராமம் சிதைந்து போகின்றது. காந்தியின் கிராமம் மிகைப்படுத்தப்பட்டது. அதை utopia என்று கூறலாம். Leanard woolf இன் கிராமம் கடுமையானது. னுலளவழியை என்று கருதலாம். இவையிரண்டுமே உண் மையைப் பிரதிபலிக்காமல் இருக்கலாம். ஆனால் இவற்றின் பின்னணியில் பாலமனோகரனின் நாவல்களை அணுகுவது பயனுள்ளதாக இருக்கும். 60 ம், 70ம் ஆண்டுகளில் கிராமத்தை அளவுகோலாக வைக்கும் நாவல்கள், சிறுகதைகளில் நிலக்கிளியை முக்கியமான பங்களிப்பாகக் கருதலாம். வன்னிப்பிரதேசத்தைப் பற்றி, தண்ணீருற்று கிராமத்தைப்பற்றி முதற் தடவையாக எழுதப்பட்ட நூல் என்ற பெருமையும் இந்த நூலுக்கு உண்டு. அதற்கு மேலாகக் கிராமம் என்னும் கோட்பாட்டில் உள்ள ஆழமான நம்பிக்கையில் உருவான நாவல் என்று இதைக் கூறலாம். இந்த நூலில் யதார்த்தம் உள்ளதா, இதில் காணப்படும் கதாபாத்திரங்களின் கள்ளம், கபடமற்ற வாழ்க்கை உண்மையில் நம்பக் கூடிய முறையில் உள்ளனவா என்னும் கேள்விகள் பொருத்தமானவை அல்ல என்று நினைக்கின்றேன். ‘நிலக்கிளி’யின் அமைப்பில் மூன்று வளையங்கள் செயற் படுகின்றன. நடுவில் ஒரு கிராமம். அதன் எல்லையில் காடு. அதற்கப்பால் நகரம். காடு கொடுமையானது. கரடிகளையும், விலங்குகளையும் உள்ளடக்கியது. ஆனால் இந்தச் சூழலில் கபடம் இல்லை. காட்டில் தப்பி வாழ்வதற்குரிய ஒழுக்கவியலுடன் இயங்கும் இடம் இது. நகரமோ, நாகரீகம் என்னும் பெயரில் பல குறைபாடுகளைக் கொண்டது. அதனுடைய கல்வியும், பணம் சேர்க்கும் தாகமும், பொருளாதார நோக்கும் அதன் மனிதத்தன்மையை மாற்றியமைக்கின்றது. இவற்றிற்கு கிராமம் பளிச்சென்று தென்படுகின்றது. இந்த உலகில் நகரத்தின் செல்வாக்கு ஊடுருவிச் செல்லலாம். அதனால் கிராமத்தின் பிரதிநிதிகள் பாதிக்கப்படலாம். ஆனால் இறுதியில் கிராமம் மாசில்லாமல் வௌளை மனமாக மாறிவிடுகின்றது. ஆசிரியரின் வார்த்தையில் ‘நிலக்கிளி’ நிலத்தில் வாழ்பவைதான். உயரே பறக்க விரும்பாதவைதான். இலகுவில் பிறரிடம் அகப்பட்டுக் கொள்பவைதான். ஆனால் எளிமையானவை! அழகானவை! தம் சின்னச் சொந்த வாழ்க்கை வட்டத்துள்ளே உல்லாசமாகச் சிறகடிக்கும் அவற்றின் வாழ்க்கைதான் எவ்வளவு இனிமையானது. இந்த நாவலின் அமைப்பிற்கும், அன்று நிலவிய சமுதாய சூழலுக்கும் இடையில் உள்ள தொடர்பு நுட்பமானது எதற்காக ஆசிரியர் இயற்கை வர்ணனையில் யதார்த்தத் தையும், கதாபாத்திரங்களில் ஒருவகையான இலட்சியவாதத்தையும் கையாள்கிறார் என்பது ஆராயப்பட வேண்டிய விடயம். நிலக்கிளியின் அதே சூழலுக்கு 35 ஆண்டுகளின் பின்னர் Bleeding Hearts செல்கிறது. அதே காலப்பிரிவை மீண்டும் எடுத்துக்காட்டுகின்றது. ஆனால் இப்பொழுது மொழி வேறு, வாசகர்கள் வேறு. ஆங்கிலத்தில் எழுதும்போதே அதற்குரிய சிக்கல்கள் உருவாகிவிடுகின்றன. இந்த நூலுக்கு வாசகர்கள் வெளிநாட்டவர்கள். வன்னியைப்பற்றி மட்டுமல்ல, ஈழத்தை பற்றியே அறியாதவர்களாக இருக்கலாம். அதே சமயம் பண்பாட்டைப் பற்றி ஓரளவு தெரிந்த, ஆனால் ஈழத்தில் வளராத, வாழாத இளம் தலைமுறை வாசகர்களாகவும் இருக்கலாம். இந்தமாறுபட்ட நிலமைகளைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்ட சிறந்த நாவலாகவே Bleeding Hearts யை அணுக வேண்டும்.‘நிலக்கிளி’க்கும், Bleeding Heartsஇற்கும் இடையில் அடிப்படையான வேறுபாடு இருப்பதை நாவலின் பெயரில் கண்டு கொள்ளலாம். நிலத்திற்கு அருகில் வாழும் கிளி நாவலில் குறியீடு என்ற முறையில் இயங்குகின்றது. கிராமத்து மக்கள் ‘நிலக்கிளி’யைப் போன்று உலக விபரம் தெரியாது வாழ்கின்றார்கள். Bleeding Heartsஒரு பூவின் பெயர். அதன் பெயரோடு ஒரு கதை. ஒரு பண்பாட்டு ஐதிகம் (mythology) என்ற முறையில் இந்த இரத்தம் சிந்தும் இதயம் போன்ற பூ பன்முகப்பட்ட அர்த்தங்களை உள்வைத்திருக்கும். அர்த்தங்கள் சிலவகைகளில் முரண்பாடானவையாகவும் இருக்கலாம். விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து இறுதியில் தன்னுடைய மக்களாலே புறக்கணிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட ஒரு தலைவனின் கதையைக் கூறுகின்ற மலர் அது. அதே சமயத்தில் யேசுநாதனின் தியாகத்தையும், அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசின் துரோகத்தையும் சுட்டிக்காட்டுவதாக இந்த பண்பாட்டு ஐதிகம் (mythology) இயங்குகின்றது. எவ்வாறு இத்தகைய தெளிவின்மை அல்லது உத்வேகம் கொள்ள வைக்கும் முரண்பாட்டு உணர்வுகள் (Ambivalence) நாவலுக்குப் பயன்படுகின்றது என்று சிந்திப்பதற்கு கதைக்கரு முக்கியமாகின்றது. ஒருபுறம் தமிழ் ஆணுக்கும், சிங்களப் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் உறவு நாவலுக்கு யதார்த்தத்தைக் கொடுக்கின்றது. இதற்கு சமாந்தரமாக வினாசியர் காட்டு எருமையான குழுமாட்டைத் தேடி அடக்கிவிட எடுக்கும் முயற்சி நடைபெறுகின்றது. ஒன்று தேசிய ஐதீகம், மற்றது சமூக ஐதிகம். இரண்டும் தனித்து நிற்கின்றன. ஒருங்கிணைந்தும் நிற்கின்றன. னாசியர்
காட்டு எருமையைக் கலைப்பது யதார்த்தம் என்று மட்டும் கூற முடியாது. இதில் மாடு யார், மனிதன் யார் என்று துப்பறியும் முயற்சியிலும் வாசகர் என்ற முறையில் ஈடு பட முடியாது. அமெரிக்க நாவலாசிரியர் Herman Melville எழுதிய பிரமாதமான நாவல் Moby Dick மனிதனுக்கும், திமிங்கிலத்திற்கும் இடையில் ஏற்பட்ட போட்டியை வைத்து அமெரிக்காவின் தேசிய mythology இனை உரு வாக்குகின்றது. அதே பாங்கில் Ernest Heming way எழுதிய Old man And The Sea வடிவம் பெறுகின்றது. இதே போன்று தமிழரின் அடையாளத்திற்கும், முயற்சிகளுக்கும் பொருந்தக் கூடிய முறையில் வினாசியருடைய முயற்சி வடிவம் கொள்கிறது. சேனாவும் , நந்தாவும் வேறுபாடுகளுக்கும் அப்பால் தமது உறவைப் பேணுவது ஒருமைப்பாட்டிற்குத் தேவையான சமூக ஐதீகம். கிராமங்களில் இவ்வாறு சமய, மொழிப்பிரிவினையைத் தாண்டி மக்கள் வாழ்ந்தார்களா இல்லையா என்பது நாவலுக்கு முக்கியமல்ல. ஆசிரியரின் கற்பனையில் உருவான சமூக ஐதிகம் என்றே இதைக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு உப கதைகளும் வெவ்வேறு திசைகளை நோக்கிச் செல்கின்றன. ஒன்று ஆதிக்கத்தை நிலை நாட்டுகின்றது. மற்றது தனிப்பட்ட வாழ்க்கையை இலட்சியப்படுத்திக் காட்டுகின்றது. முன்னர்எழுதப்பட்ட நிலக்கிளியில் இறுதிப்பக்கங்கள் எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர் கொள்கின்றன. Bleeding Hearts இல் திட்டவட்டமான முடிவு முன் வைக்கப்படவில்லை. திறந்த வகையில் முன் வைக்கப்பட்ட முடிவு என்று கூறும் வகையில் நாவல் நிறைவு பெறுகின்றது. அதே வன்னிப் பிரதேசத்தை 35 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆங்கில மொழியூடாகப் பார்க்கும் போது தெளிவான முடிவுகளைக் கூறுவது கடினம். முடிவுகள் இல்லாத நாவலை முன்வைப்பதே ஆசிரியருடைய நோக்கமுமாகும். இந்த நாவல், இலக்கிய வரலாற்றுரீதியாக நோக்கும்போது அழகியல்சார்ந்த பல முக்கி யமான கேள்விகளை எழுப்புகின்றது. 2008ம் ஆண்டு எழுதப்பட்ட நாவல் எதற்காக 1977ம் ஆண்டில் கவனத்தைச் செலுத்துகின்றது. அதற்குப் பின்னர் தமிழர் மத்தியிலும், வன்னிப்பிரதேசத்திலும் ஏற்பட்ட மாற்றங்களை ஒதுக்கிப், பெருமளவில் இயற்கையோடு சேர்ந்த கிராம வாழ்க்கையை முன்வைக்கின்றது. இந்தக் கேள்விகளை மறைமுகமாகக் கேட்கும் சோ.பத்மநாதன் தன் முன்னுரையில் பாலமனோகரன் இன்னொரு நாவல் எழுதி, இப்பிரதேசத்தின் வரலாற்றை முழுமையாக்க வேண்டுமென்று கூறுகின்றார். இவ்வாறான கேள்விகளுக்கு இலக்கியத் திறனாய்வில் நிச்சயமாக இடமுண்டு. அண்மைக்கால இலக்கியத்திறனாய்வில் மார்க்சீயக் கோட்பாட்டிற்கு முக்கிய இடமுண்டு. அதற்குத் தேவையும் இருந்ததென்றே கூற வேண்டும். சமூகத் தேவைகளையோ, மனிதப் பிரச்சினைகளையோ புறக்கணிக்கும் இலக்கியம் பொதுவாக நிலைப்பதில்லை. அதே சமயத்தில், சமூக ஈடுபாட்டுக்கும், இலக்கிய யதார்த்தத்திற்கும் உள்ள தொடர்பை மட்டும் மிகைப்படுத்துவதில் அர்த்தமில்லை. சங்ககால இலக்கியம் சங்ககால மக்களின் வாழ்க்கையை எங்களுக்கு எடுத்துக்காட்டு கின்றது என்று கூறுவது சிக்கலான விடயம். சங்ககாலப் புலவர்கள் அவர்களுடைய காலத்தைக் கற்பனையில் எவ்வாறு உருவாக்குகின்றனர் என்பதே பொருத்தமான கூற்றாகும். அவ்வாறு நோக்கும்போது, Bleeding Hearts வேறொரு பரிமாணத்தைக் காட்டி நிற்கும் நாவல் என்றே கூறவேண்டும். அரசியலையே மையமாகக் கொண்ட சூழலில், இலக்கிய உலகில் வேறொரு இலக்கிய வடிவத்தை இங்கு காண்கின்றோம். சிறந்த இலக்கியங்களுக்கே உள்ள முறையில் இந்த நாவலும் அதன் கற்பனை உலகினுள் வாசகரைக் கட்டுப்படுத்துகின்றது. யதார்த்தம் எங்கு ஆரம்பிக்கிறது. எல்லாம் எங்கு ஆரம்பிக்கின்றது என்று தெரியாத அளவிற்கு இரண்டும் இணைந்து நிற்கின்றன. வினாசியர் குழுமாட்டினைத் துரத்துவது யதார்த்தமா என்று தெரியாத அளவிற்கு நாவலில் மொழி அல்லது கூறும் நேர்த்தி வளைந்து கொடுக்கின்றது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்த நாவல் முல்லைத்தீவிற்கு அண்மையில் உள்ள பிரதேசத்தை எங்கள் முன் வைக்கின்றது என்பதை மறுக்க முடியாது. அதுவும் 35 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்க்கை அரசியல்மயமாக்கப்படுவதற்கு முன்னர் எப்படி இருந்திருக்கலாம் என்பதைச் சித்தரிக்கின்றது. இன்றைய ஈழத்து மக்களுக்கும், புலம்பெயர்ந்த மக்களுக்கும் நுட்பமான வகையில் பேசக்கூடிய நாவல். தனிப்பட்ட ஒருமுகமாகக் கருத்தை மட்டும் கூறாது பல எண்ணங்களை, கற்பனைகளைத் துண்டி விடும் நாவல். அண்மையில் காலஞ் சென்ற Tina Abeysekera, Brugery Tony Home என்ற அருமையான நாவல் ஒன்றினை எழுதினார். Bleeding Hearts போன்று கிராமத்தை மையமாகக் கொண்ட இந்த நாவல் திடீரெனப் இலக்கிய உலகில் பிரவேசித்ததற்கு காரணமுண்டு. 60ஆம் ஆண்டளவில் ஆங்கில இலக்கியத்தில் கிராமத்தை மிகைப்படுத்தி, சொர்க்கமாகப் பிரதிபலித்த நாவல்கள் வெளிவந்தன. பின்னர் கிராமத்தை விட்டு நகரத்தை மையமாகக் கொண்டு கிராமத்தைப் புறக்கணித்து நாவல்கள் வெளிவந்தன. இப்பொழுது மீண்டும் கிராமத்திற்குச் சென்று புதிய நோக்கோடு அந்தச் சூழலை முன்வைக்கிறார்களா என் னும் கேள்வி எழுகின்றது. இப்பொழுது உருவாகும் கிராமம் பன்முகப்பட்டது, பல சக்திகளை உள்ளடக்குவது. கருத்தாழம் கொண்டது, யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது. அந்தப் பட்டியலில் Bleeding Hearts இற்கு முக்கிய இடமுண்டு.இறுதியாக, ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் மத்தியில் ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் மிகக் குறைவென்றே கூற வேண்டும். அழகு சுப்பிரமணியம், சாந்தன், சியாம் செல்வதுரை, சிவானந்தன், எஸ்.பொ என்று ஒரு சிலரையே கூறலாம். இந்தக் காலகட்டத்தில் பல்வேறு காரணங்களுக்காக ஆங்கிலத்தில் எழுத வேண்டிய தேவை உள்ளது. தமிழ் தெரியாத தமிழ் மக்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்வது ஒரு முக்கிய காரணம். அதற்கும் மேலாக ஈழத்துத் தமிழ் வாழ்க்கையைப் பற்றி பல்வேறு நாடுகளிலும் வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. எங்களில் சிலர் மொழிபெயர்ப்பு மூலம் சில இலக்கியங்களை அறிமுகப்படுத்துகின்றார்கள். ஆனால் மொழிபெயர்ப்பின் தன்மையே வேறு. அதன் விளைவுகளும், பாதிப்புகளும் வேறுபட்டவை. மொழிபெயர்ப்பும் வேண்டும். மூலத்தில் எழுதவும் வேண்டும். Bleeding Hearts என்னும் நாவலை எழுதுவதன் மூலம் பாலமனோகரன் புதிய பாதையையும், புதிய பார்வையையும் காட்டியுள்ளார். எளிய நடையும், எளிய சொற்பிரயோகமும் எந்த அளவிற்கு கருத்தாளத்தை உள்ளடக்கும் என்று இந்த நாவலில் ஆசிரியர் நிரூபிக்கின்றார். ஆங்கிலத்தில் எழுத விரும்பும் அடுத்த சந்ததியினருக்கு இந்த நாவல் முன்மாதிரியாகவும், அளவுகோலாகவும் அமையும் என்பது நிச்சயம். பாலமனோகரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். என்னை இங்கு பேசுமாறு கேட்ட முரளிக்கும், என்னுடைய சிந்தனைகளைப் பரிமாற சந்தர்ப்பம் கொடுத்த உங்கள் யாவருக்கும் எனது நன்றிகள். வணக்கம்.
No comments:
Post a Comment